ஒமிக்ரான் :ஆட்சியர்களுக்கு சுகாதாரச் செயலாளர் உத்தரவு!

Published On:

| By Balaji

ஒமிக்ரான் தொற்றினை கண்காணிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் நேற்று பிற்பகல்வரை 25 ஆக இருந்த ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 32 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் நேற்று மட்டுமே 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் நேற்று தலைமைச் செயலாளர் தலைமையில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் கொரோனா கண்காணிப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். மருத்துவ கட்டமைப்புகளை கண்காணிப்பதுடன், தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டும். தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ஒன்றிய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, மாநில செயல் திட்ட குழுவானது, நோய் தடுப்பு முறைகள் குறித்து புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி ஆபத்தான நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனே வழங்கி தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுடன் பயணம் செய்த சக பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். அதில், முடிவுகள் நெகட்டிவ் என்று வந்தால் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும். துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்த நடைமுறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

ஒரு இடத்தில் அல்லது ஒரு குடும்பத்தில் அதிகப்படியானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களது மாதிரிகளையும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்மூலம் தொற்று பரவும் விகிதத்தை தடுக்க முடியும்.

மாவட்டங்களில் பொது இடங்களாக இருக்கும் பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிவது குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போடாத நபர்களையும், இரண்டாவது டோஸ் போடாதவர்களையும் கண்டறிந்து தடுப்பூசி போட வழிவகை செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்தால், நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share