ரூ.51 கோடி கடன் பாக்கி: டீக்கடைக்காரரை அதிரவைத்த வங்கி!

Published On:

| By Balaji

�ரூ.50,000 கடன் கேட்டு வங்கியை அணுகிய டீக்கடைக்காரரிடம், ஏற்கெனவே நீங்கள் ரூ.51 கோடி கடன் பாக்கி வைத்துள்ளீர்கள் என வங்கி நிர்வாகம் கூறி, அதிரவைத்த சம்பவம் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தனது டீக்கடையை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மீண்டும் டீக்கடையைத் திறக்க ரூ.50,000 கடன் கேட்டு தனியார் வங்கி ஒன்றுக்கு மனு செய்திருந்தார்.

அவர் பெயர் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த வங்கி அதிகாரிகள், “நீங்கள் ஏற்கெனவே வங்கியில் ரூ.51 கோடி கடன் வாங்கியுள்ளீர்கள். உங்களுக்கு அது தெரியாதா? இப்போது மேலும் கடன் கேட்டால் எப்படி தரமுடியும்? முதலில் ரூ.51 கோடி கடன் பாக்கியை கட்டுங்கள்” எனக் கூறினர்.

அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், “சாதாரண டீக்கடை வைத்துள்ள நான் இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியது கிடையாது. அப்படியிருக்க எப்படி ரூ.51 கோடி கடன் வாங்கினேன் என எனக்கே தெரியவில்லை” என்றார்.

தனது பெயரில் மோசடி நடந்திருப்பதை உணர்ந்தவர், இதுதொடர்பான புகாரை வங்கி அதிகாரிகளிடம் அளித்துள்ளார். இதையடுத்து வங்கி நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இது நிச்சயம் தொழில்நுட்ப கோளாறாகத் தான் இருக்க முடியும் என்று ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

**ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share