உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதன் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் இன்று (நவம்பர் 7) சென்னை கோயம்பேட்டிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்களைக் கோரலாம் என்பது உள்ளிட்ட அம்சங்களும் விவாதிக்கப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா, “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைக்கப்படும். அது அதிமுக குழுவுடன் பேசி இடங்கள் முடிவுசெய்யப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, எங்களது குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
**கேள்வி: மற்ற கூட்டணிக் கட்சிகளை விட தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?**
“தேமுதிகவுக்கு கணிசமான இடங்களை கேட்டுள்ளோம். அதனை தருவதாக அதிமுக தரப்பில் உறுதியளித்திருக்கிறார்கள். எந்த கட்சியுடனும் எங்களை நாங்கள் ஒப்பிடவில்லை. ஏனெனில், தேமுதிகவின் பலம் என்னவென்பது எங்களுக்குத் தெரியும். விக்கிரவாண்டி தொகுதி பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் ஒருநாள் மட்டும்தான் வந்தார். அப்போது, தேமுதிகவின் பலம் என்னவென்பது தமிழகத்துக்கே தெரிந்துவிட்டது. அதிமுகவுக்கும் முதல்வருக்கும் கூட தெரியும். ஆகவே எங்கள் கட்சியின் பலத்திற்கு ஏற்ற இடங்களை உள்ளாட்சித் தேர்தலில் ஒதுக்கித் தருவார்கள். நாங்கள் 50 சதவிகித இடங்களைக் கூட கேட்போம்”
**விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது பாமக-தேமுதிக இடையேயான மோதல் உண்டானதே**
“கூட்டணிக்குள் ஒரு சண்டையும் இல்லை. இருவருக்கு இடையேயான சிறிய வாக்குவாதம்தான் அது. அதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தி கலவரம் போல காட்டிவிட்டனர். இதைப்பார்த்தால் எதிர்க்கட்சியின் கூட்டணியில் எத்தனையோ குளறுபடிகள் நடைபெற்றுவருகிறதே அதற்கு என்ன சொல்வது. எங்கள் கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்படுகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கூட்டணி அமோகமாக வெற்றிபெறும்”
**தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்துடன்தான் இன்றும் உள்ளதா அல்லது கூட்டணிக்காக அதில் சமரசம் செய்துகொண்டதா?**
தேமுதிக ஆட்சி வரும் என்பதற்காகத்தான் கட்சியை ஆரம்பிக்கிறேன் என்று திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவில் கூட விஜயகாந்த் தெரிவித்திருந்தார். அதற்கான நேரமும் அதற்கான சூழலும் நிச்சயம் வரும். அப்போது, உங்களின் கேள்விக்கான பதிலை நாங்கள் செயல்வடிவத்தில் காண்பிப்போம். 2021 மட்டுமல்ல ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் அவரவர் தங்களது கட்சிதான் ஆட்சியமைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எனினும் அன்றைய காலகட்டத்தில் என்ன சூழல் உள்ளது என்பதை யோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்போம்”
**விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கிறது?**
“விஜயகாந்த் உடல்நிலை தற்போது சிறப்பாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். மிக விரைவில் கம்பீரமாக நடை, பேச்சுடன் விஜயகாந்தை நீங்கள் பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
�,”