சத்தீஸ்கர், ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் திகரப்பரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் 34 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். அதிக பாதிப்புள்ளவர்களுக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதல்தளத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து புகை வருவதை கண்ட , மேற்பார்வையாளர் இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
தீ விபத்தில் சிக்கிக்கொண்ட நோயாளிகளை மீட்கும் நடவடிக்கையில் வீரர்கள் ஈடுபட்டனர். 29 நோயாளிகளை பத்திரமாக மீட்டு, மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீ விபத்தில் மூச்சு திணறல் காரணமாக 4 பேரும், தீ காயங்களால் ஒருவரும் என மொத்தம் 5 பேர் பலியாகினர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது என்பதால் மருத்துவமனைக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ராய்ப்பூர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், நகரில் உள்ள அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு அம்சம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் பாரதி தாசன்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் மும்பை தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
வடமாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தீ விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. லக்னோவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஐ.சி.யூ மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனை உள்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
.�,