தமிழக அரசு நேற்று (ஜூன் 30) நள்ளிரவு அதிரடியாக 39 ஐபிஎஸ் உயரதிகாரிகளை மாற்றியிருக்கிறது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகர கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் 2017ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் முழுதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய ஏ.கே.வி, நேற்று மாநில அமலாக்கப் பிரிவு கூடுதல் ஏடிஜிபியாக மாற்றப்பட்டிருக்கிறார். இவருக்குப் பதிலாக சென்னை போலீஸ் கமிஷனராக 1994 ஐ.பி.எஸ். பேட்ச் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக தற்போது செயல்பட்டு வந்த மகேஷ்குமார் ஏற்கனவே சிபிசிஐடி தலைவராகப் பணியாற்றியவர். மதுரை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.
சென்னையின் முழு ஊரடங்கு நேரத்தில் மாநகரப் போலீஸார் சிறப்பாகப் பணியாற்றியதாக பெயரெடுத்து வந்த நிலையில் கமிஷனர் இரு நாட்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸார் தாக்குதல் நடத்தி இருவர் மரணம் அடைந்தது பற்றி ஏ.கே.விஸ்வநாதன் கருத்து தெரிவித்தபோது, “போலீஸார் பொதுமக்களை அடிப்பது மிகவும் தவறான செயல். மக்களை தாக்கக் கூடாது என்று காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். மக்களை தாக்குவதும், துன்புறுத்துவதும் சட்டப்படி தவறு. யாருடைய மனத்தையும் புண்படுத்துவது போல்கூட பேசக் கூடாது எனவும் காவல் துறையினருக்குக் கூறியுள்ளோம். பொதுமக்களை தவறான முறையில் கையாளக் கூடாது என அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இது தவிர, திருச்சி மத்திய மண்டல ஐஜியான அமல்ராஜ் ஐபிஎஸ், சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றும் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், மாநிலத் தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டிருக்கிறார். இப்படி பல அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறது தமிழக அரசு
**-வேந்தன்**
�,