எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இணையதளத்தில் சான்றிதழைச் சரியாகப் பதிவேற்றம் செய்யாதவர்கள் மார்ச் 1 அன்று நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட 6,491 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியது. 2019 செப்டம்பர் 1ஆம் தேதி இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட்டு கலந்தாய்வுக்கு அழைத்தது. இந்த நிலையில் சான்றிதழ்களை முறையாக பதிவேற்றம் செய்யவில்லை என்று பலரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த திருமலைசாமி, திருவாரூரைச் சேர்ந்த கேசவமூர்த்தி உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில், இணையதளத்தில் முறையாகச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை என கூறி பலரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை இணையதளத்தில் சான்றிதழ்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்யாத காரணத்துக்காகப் புறக்கணிக்காமல் எங்களையும் கலந்தாய்வுக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக அரசின் இ-சேவை மையத்திலிருந்துதான் கல்வி சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தனர். அதற்கான ரசீதுகளும் சம்பந்தப்பட்ட மையங்களால் கொடுக்கப்பட்டன. அந்த மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யவில்லை. அதற்காக எங்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. எங்கள் அனைவரையும் கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் ” என்று வலியுறுத்தப்பட்டது.
அப்போது டிஎன்பிஎஸ்சி சார்பில், “மனுதாரர்களுக்குச் சான்றிதழ்களைக் கூட இணையத்தில் சரியாக பதிவேற்றம் செய்யத் தெரியவில்லை. எனவே இவர்களை அடுத்த கட்ட தேர்வு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது
இதனை விசாரித்த நீதிபதி, “சான்றிதழ் பதிவேற்றம் செய்தபோது ஏற்பட்ட தவறுக்காக தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளவர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. இது போன்று சிறிய தவறுக்காக கலந்தாய்வுக்கு அழைக்காமல் அவர்களை நிராகரிப்பதை ஏற்க முடியாது. எனவே நடைபெறவுள்ள கலந்தாய்வில் அவர்களை அழைக்க வேண்டும். இந்தத் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் இவ்வழக்கின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
�,”