உயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் கோரிக்கை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் மீது முடிவு எடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பத் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல் துறையில் பணியாற்றிய குமரன் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு அவரை பணிநீக்கம் செய்து சென்னை காவல் துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மேல்முறையீட்டு மனு அளித்தார். இதுவரையில் இந்த மனு நிலுவையில் உள்ளது.
இதனிடையே குமரன் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். எனவே நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் 2019ஆம் ஆண்டு மீண்டும் மேல்முறையீடு செய்தார்.
இந்த இரு மேல்முறையீட்டு மனுக்கள் மீதும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படாததால், இதனைப் பரிசீலிக்கச் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் குமரன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனுதாரரின் மேல்முறையீட்டு மனுக்களை இரு மாதங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பித்து மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.
மேலும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, கோரிக்கை மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படாததால் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
பல கொடூரமான குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக உலா வருவதாகத் தெரிவித்த நீதிபதி வைத்தியநாதன், உயர் நீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் கோரிக்கை மனுக்கள், மேல்முறையீடுகள் மீது முடிவு எடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
**- பிரியா**
�,