ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 25) உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆன்லைனில் பட்டாசு விற்க தடை விதித்தது.
ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை துணைத் தலைவர் சஞ்சனா சர்மா, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருக்கு எதிராக ஷேக் அப்துல்லா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் தீபாவளி நெருங்கியுள்ள நிலையில், ஆன்லைனில் முறைகேடாக பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. எனவே ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று (அக்டோபர் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி ஆன்லைன் பட்டாசு இணையதளங்களை முடக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பது தண்டனைக்குரிய குற்றம் என விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்.
�,