தலைமையாசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், ”ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வந்த நாங்கள் பதவி உயர்வு மூலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். எங்களின் சொந்த மாவட்டங்களில் காலியிடம் இல்லாததால், வேறு இடங்களில் நியமிக்கப்பட்டோம். கொரோனா தொற்று காரணமாக, 2020ஆம் ஆண்டுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிப்ரவரி 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமையாசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் எங்களைப் போன்றவர்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்படும். அதனால், பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த இடைக்கால தடை விதித்து, வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், மீண்டும் இன்று இந்த வழக்கு விசாரணையை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் விசாரித்தார். தலைமையாசிரியர் பொதுஇடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். முதலில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு, பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
**வினிதா**
�,