தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜனநாயக அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மாயவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். ” அதில், தேர்தல் பணி காரணமாக வேறு தொகுதிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாக்களிக்க போதுமான கால அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 62 ஆயிரம் பேரால் வாக்களிக்க முடியவில்லை.
தற்போது, கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பணி நிமித்தமாக வேறு இடங்களுக்கு செல்பவர்களுக்கு வாக்கு அளிப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும், தேர்தலுக்கு முந்தைய நாளில் அதே வாக்குச்சாவடியில் தங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 10) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மின்னணு மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது. அவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,போதுமான ஊதியம் இல்லாமல் துணிச்சலாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது. அதனால், தபால் வாக்கு அளிக்க அவர்களுக்கு போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
**வினிதா**
�,