பயணிகளிடம் ரூ.69 கையாடல் செய்த நடத்துநரைப் பணி நீக்கம் செய்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 24) உறுதி செய்துள்ளது.
சேலம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மணிமாறன் என்பவர் நடத்துநராக 1993இல் பணியில் சேர்ந்துள்ளார். இவர் அருளாளம் தேன்கனிக்கோட்டை வழித்தட பேருந்தில் பணியாற்றி வந்துள்ளார். 1994இல் இவர் பணியிலிருந்தபோது ஒரு நாள் ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது, ஏற்கனவே விற்கப்பட்ட டிக்கெட்டுகளை பயணிகளிடம் ரூ.2.20க்கு விற்றதுடன், விற்ற பணத்தில் ரூ.68.95 கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மணிமாறனிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவரை பணியிலிருந்து நீக்கி போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மணிமாறன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மணிமாறனை மீண்டும் பணியில் அமர்த்தவும், அவருக்குப் பணி நீக்கக் காலத்துக்கான ஊதியத்தில் 25 சதவிகிதம் வழங்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து போக்குவரத்துத் துறை இயக்குநர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணிமாறன் தனது பணிக்காலத்தின்போது, அதாவது இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை இதுபோன்ற தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் எனக் கூறி அவரை மீண்டும் பணியில் அமர்த்தும்படி தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.�,