ஹரியானா மாநில முதல்வராக மனோகர் லால் கட்டாரும், துணை முதல்வராக துஷ்யந்தும் நாளை பதவியேற்கவுள்ளனர்.
90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஹரியானா தேர்தல் முடிவில் பாஜக 40 தொகுதிகளையும், காங்கிரஸ் 31 தொகுதிகளையும் கைப்பற்றியது. முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், சுயேச்சையாக வென்ற 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவளித்தனர்.
திடீர் திருப்பமாக உள் துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலா, பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தார். மேலும், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது எனவும் சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று (அக்டோபர் 26) ஹரியானா தலைநகர் சண்டிகரில் நடைபெற்றது. அதில், மனோகர் லால் கட்டார் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து ஹரியானா ஆளுநர் சத்யடியோ நரைன் ஆர்யாவை சந்தித்த மனோகர் லால் கட்டார், ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்டார், “ஹரியானாவில் ஆட்சியமைப்பதற்காக ஆளுநரிடம் உரிமை கோரினோம். எங்கள் கோரிக்கையை ஏற்று ஆளுநரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். கடந்த ஆட்சிகாலத்தில் முதல்வராக பதவி வகித்ததற்கான ராஜினாமா கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்துள்ளேன். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் ராஜ்பவனில் பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொள்வார்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலாவிற்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் பரோல் வழங்கப்பட்டிருப்பதால், இன்று இரவு அல்லது நாளை காலை சிறையிலிருந்து அவர் வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள துஷ்யந்த், தந்தை வரவு மிகப்பெரிய பலம் அளிக்கக் கூடியதாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
�,”