பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதிய கார்: 3 பேர் பலி!

Published On:

| By Balaji

இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில், உலகளவில் இந்தியாவில் தான் அதிக விபத்து ஏற்படுவதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

அந்தவகையில், தமிழகத்தில் இன்று தருமபுரி அருகே பேருந்துக்காக காத்திருந்த போது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த எஸ்.பட்டி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஊத்தங்கரை செல்வதற்காகப் பேருந்துக்காகப் பயணிகள் காத்திருந்தனர். அப்போது சேலத்திலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார், நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெண்மனி, சிவலட்சுமி மற்றும் 14 வயது சிறுவன் ஸ்ரீநாத் ஆகியோர் உயிரிழந்தனர்.

தங்கமணி, புஷ்பா ஆகிய இருவருக்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் மூவர் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்து நடந்த சாலையில் அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தாமதமாவதாகவும், அதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாகவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share