அரையாண்டுத் தேர்வின் இறுதித் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் சமூக வலைதளங்களில் கசிந்த வினாத் தாள்களே வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மாற்று வினாத் தாள்கள் வழங்கப்பட்டதாகக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றன. இதுபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்நிலையில் இந்த மூன்று வகுப்புகளுக்கான வினாத் தாள் ஷேர் சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்குப் பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுத்து வினாத் தாள்களை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எனினும் கடந்த வெள்ளியன்று 12ஆம் வகுப்புக்கு நடந்த வேதியியல் தேர்வில் சமூக வலைதளங்களில் கசிந்த வினாத் தாளே வழங்கப்பட்டன. இது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பள்ளிக் கல்வித் துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று இறுதித் தேர்வு நடைபெறும் நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் சமூக வலைதளங்களில் வெளியான வினாத் தாளே கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. குறிப்பாகத் தூத்துக்குடியில் லீக்கான வினாத் தாள்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மாற்று வினாத் தாளை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வினாத்தாள்களை உடனடியாக மாற்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி இன்று (டிசம்பர் 23) நடைபெறும் அரையாண்டுத் தேர்வை முன்னிட்டு அனைத்து தேர்வு மையங்களுக்கு மாற்று வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாமக்கல் கல்வி அலுவலர் உஷா, நெல்லை முதன்மை கல்வி அதிகாரி பூபதி ஆகியோர் கூறியுள்ளனர்.�,