சிறப்புக் கட்டுரை: ஹட யோகா செய்தால் சிக்ஸ்பேக் வருமா?

Published On:

| By Balaji

சத்குரு

யோகாசனங்கள் செய்வதால் சிக்ஸ்பேக் வருமா என்ற மனநிலையுடன் சிலர் ஹட யோகாவை அணுகுகின்றனர். உண்மையில், யோகாசனங்கள் எத்தகைய உயரிய பரிமாணங்களை வழங்கவல்லது என்பது குறித்து சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார். ஆசன சித்தி மற்றும் ஹட யோகாவின் உள்நிலை அறிவியல் குறித்து சத்குரு விரிவாகப் பேசுகிறார்!

ஒரு ஆசனம் என்பது உடல் இருக்கும் ஒரு நிலை. உங்களது உடல் எண்ணற்ற நிலைகளை எடுக்க முடியும். அவற்றுள், சில குறிப்பிட்ட நிலைகள், ‘யோகாசனங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. “யோகா” என்றால், உயர்நிலைப் பரிமாணங்களுக்கோ அல்லது வாழ்வின் உச்சபட்ச புரிதலை நோக்கியோ உங்களை அழைத்துச் செல்வது. எனவே ஒரு உயர்ந்த சாத்தியத்தை நோக்கி உங்களை வழி நடத்தக்கூடிய உடல் இருப்பு நிலை “யோகாசனம்” என்று அழைக்கப்படுகிறது.

உங்கள் மன உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவதைப் போன்று, உங்கள் உடல் பல மாறுபட்ட நிலைகளை இயல்பாகவே எடுப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் ஒருவிதமாக அமர்ந்திருக்கிறீர்கள். வருத்தமாக இருக்கும்போது வேறுவிதமாக அமர்கிறீர்கள். அமைதியாக இருக்கும்போது ஒரு விதமாகவும், கோபமாக இருக்கும்போது மற்றொரு விதமாகவும் அமர்ந்திருக்கிறீர்கள். அனேக தருணங்களில் ஒருவர் அமர்ந்திருக்கும் விதத்தைக் கவனித்தாலே, அவருக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களால் கூறிவிட முடியும். அதை அடிப்படையாக வைத்தே ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தன்னுணர்வுடன் உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் இருத்தி வைப்பதன் மூலம், உங்களது விழிப்புணர்வைக்கூட நீங்கள் உயர்த்திக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்வதன் மூலமே கூட நீங்கள் உணரும் தன்மை, எண்ணப்போக்கு, புரிதல் மற்றும் வாழ்வை அனுபவிக்கும் விதம் போன்றவற்றை மாற்ற முடியும்.

யோகாசனங்கள் உடற்பயிற்சிகள் அல்ல. உங்களது சக்தியை ஒரு குறிப்பிட்ட திசையில் இயக்குகின்ற, மிக நுட்பமான செயல்முறைகள். ஆசனங்கள் ஒருவிதமான விழிப்புணர்வோடு செய்யப்படவேண்டும். ஆசனங்களில் பல படிநிலைகள் உண்டு. நீங்கள் ஆசனப்பயிற்சிகளை உடலியல்ரீதியாக மட்டும் செய்யலாம் அல்லது மிகவும் ஆழமான தன்மையில், விழிப்புணர்வோடு, சுவாசம், உணர்வு, அதிர்வுகள் ஆகியவை கவனித்து செய்யலாம். அல்லது நாடிகளைப் பற்றிய விழிப்புணர்வுடன் அல்லது உரிய மந்திர உச்சாடனைகளுடன் செய்யலாம். இவை தவிர, நீங்கள் உடலின் ஒரு பகுதியைக்கூட அசைக்காமலே ஆசனங்கள் செய்யமுடியும். இதுவும்கூட சாத்தியம்தான்.

ஆசனங்களின் அறிவியல் ஹட யோகா என்று அறியப்படுகிறது. “ஹ” என்றால் சூரியன், “ட” என்றால் சந்திரன். யோகாவின் முதல் செயல்முறையே, உங்களுக்குள் இருக்கின்ற ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை இவற்றுக்கு இடையில் சமநிலை கொண்டு வருவதுதான். உங்களுக்குள் சமநிலை இல்லையென்றால், விழிப்புணர்வை அடையமுடியாது. இதனால்தான் சிவா, அர்த்தனாரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய ஒரு பாதி பெண்ணாகவும், மறுபாதி ஆணாகவும் உள்ளது. அவர் ஒரு ஆண், ஆண்மையின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார்.

அதே நேரத்தில் அவர் ஒரு பெண்ணாகவும் இருக்கிறார். ஏனெனில் இந்த சமநிலையை உருவாக்காமல், நமக்குள் இந்த இரண்டு பரிமாணத்தையும் உருவாக்க முடியாமல் உச்சத்தைத் தொடுவது என்பது முடியாது. இந்த சாத்தியங்களை உருவாக்காமல் ஒரு மனிதன் தனது உச்சபட்ச சாத்தியத்தில் மலர்ச்சி பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அதனால்தான் நீங்கள் பயிற்சி செய்யும் யோகாவின் முதல் பரிமாணம் ஹட யோகாவாக இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், சூரியன் மற்றும் சந்திரனின் யோகா. இது, ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை இவைகளுக்கு இடையில் சமநிலையை உருவாக்குகிறது. எனவேதான் முதலில் எடுக்கப்படவேண்டிய படிநிலையாக அது உள்ளது.

யோகாசனங்களில், அடிப்படையான 84 ஆசனங்கள் மூலமாக ஒருவர் தனது விழிப்புணர்வை உயர் நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும். 84 ஆசனங்கள் என்று நாம் கூறும்போது, 84 ஆசன நிலைகள் என்று நினைத்து விடாதீர்கள். முக்தி நோக்கத்திற்கான 84 வழிகள், முறைகள் உள்ளன. இவற்றுள் ஒரே ஒரு யோகாசனத்தில் உங்களுக்கு ஆளுமை இருந்தால்கூட, இந்த ஒட்டு மொத்த படைப்பில் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

ஹட யோகாவை, தங்களது வாழ்க்கை முறையாகவே கொண்டுள்ள மனிதர்கள், அவர்களின் வாழ்க்கைக்கான சாதனா என்று பொதுவாக, ஒரே ஒரு ஆசனாவை எடுத்துக்கொள்கின்றனர். இது ஆசன சித்தி எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட விதத்தில், முற்றிலும் சுகமாக ஒருவர் அமரக்கூடிய திறன் பெற்றிருப்பது, ஆசன சித்தி எனப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு, அவர்கள் தங்களது உடலை எந்த விதமாக வைத்திருந்தாலும், அவர்களுக்கு அது சுகமாக இருப்பதில்லை. நீங்கள் உட்கார்ந்திருந்தாலும் அது வசதியாக இல்லை, நின்றாலும் வசதிப்படவில்லை, கீழே படுத்தாலும் வசதியில்லை. இப்படிப்பட்ட ஒரு உடலை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது? யோகாவின் செயல்முறைக்கு உங்கள் உடலை முழுமையாக ஆட்படுத்தினால், மெல்ல மெல்ல உடல் சுகம் பெறுகிறது. வெறுமனே உட்கார்ந்தால்கூட, அது முற்றிலும் சுகம்தான்.

ஒரு குறிப்பிட்ட விதமாக உட்கார்வதையே தன் குறிக்கோளாகக் கொண்டு எப்படி ஒரு மனிதன் தன் முழு வாழ்க்கையையும் கழிக்கமுடியும் என்பதை, சிந்திக்கும் ஒரு மனதினால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் உடலை ஒரு நிலையில் நிறுத்துவதில் ஆளுமை பெறுவதால் மட்டுமே கூட, கிரகிக்கக்கூடிய அனைத்தையும் கிரகிக்க முடியும். யோகாசனத்தின் பலனே அதுதான்.

ஹட யோகா ஏன் தனது மேன்மையை இழந்துள்ளது என்றால், மக்கள் அதை ஒரு சர்க்கஸ் போல் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலை நாடுகளில் ஹட யோகா நிகழும் விதம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், யோகாவின் பெயரால் எல்லாவிதமான விஷயங்களும் நடத்தப்படுகின்றன. ஆனால் அவை எதுவும் யோகா அல்ல.

சமீபத்தில், சில இளைஞர்களுடன் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னிடம் அவர்கள், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். நான் பதிலளிக்காமல், பந்தை அடித்தவாறு நடந்துகொண்டிருந்தேன். அவர்கள் என்னுடன் இருந்த ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்டனர். அவர், “இவர் யோகா கற்றுத்தருகிறார்”, என்றார்.

உடனே அவர்கள் என்னிடம் ஓடி வந்து, “எங்களுக்கு சிக்ஸ் பேக் வருவது போல் ஏதாவது உங்களால் கற்றுத்தர முடியுமா?” என்றனர்.

நான் கூறினேன், “நீங்கள் ஆர்வத்துடன் இருந்தால், உங்களுக்கு நான் 14 பேக் கூடத் தர முடியும்“.

யோகா, உங்களது உடலை செதுக்கிக்காட்டுவது பற்றியது அல்ல. இது, தெய்வீகத்தை உள்வாங்குவதற்காக, உங்களது உடலை ஒரு அற்புதமான பாத்திரமாக, வியக்கத்தக்க ஒரு கருவியாக மாற்றுவதற்கானது. ஹட யோகா ஒரு அதிசயம் நிறைந்த செயல்முறை. ஆனால் இன்று, பல உடற்பயிற்சியாளர்களும், உடலியல் வல்லுனர்களும் ஹட யோகா பற்றி புத்தகங்கள் எழுதுவதன் மூலம், அது ஒரு பயிற்சிமுறை என்று மக்களை நம்ப வைக்கின்றனர். ஆனால் அது உடற்பயிற்சி அல்ல. துரதிர்ஷ்டவசமாக மேலைநாட்டு யோகா வெறும் உடலியல் அம்சமாக மட்டுமே உள்ளது.

யோகாவின் உடலியல் அம்சத்தை மட்டுமே கற்றுத்தருவது என்பது, இறந்த குழந்தையைப் பெறுவதைப் போன்றது. உயிருள்ள ஒரு விஷயம் உங்களுக்கு வேண்டுமென்றால், ஹட யோகாவை ஒரு குறிப்பிட்டவிதமாக கற்றுத்தர வேண்டியுள்ளது. ஒரு முறையான சூழலில், முழு செயல்முறையையும் குறிப்பிட்ட பணிவுடனும், இணைத்துக் கொள்ளும் உணர்வோடும் கற்றுத்தரப்படும்போது, ஹட யோகா, மிக அற்புதமான செயல்முறையாக இருக்கிறது.

**

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

**

[சிறப்புக் கட்டுரை: தரையில் அமர்வதால் என்ன பயன்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/06/12/8/what-is-the-use-of-sitting-on-the-floor)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share