அமெரிக்காவில் 2022ஆம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் (மார்ச்) 9ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்றத் துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிவதற்காக எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் அதிகளவில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்பப் பணியாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
ஆனால், வெளிநாட்டு பணியாளர்களால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறி முன்னாள் அதிபர் டிரம்பின் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் எச்1பி உள்ளிட்ட விசாக்கள், நிரந்தர குடியுரிமை அட்டை ஆகியவற்றுக்குத் தடை விதித்தார்.
பின்னர், இந்தத் தடையை மார்ச் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்தார். இதற்கிடையே டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் எச்1பி விசாக்கள் ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.
விசா ஒதுக்கீட்டில் குலுக்கல் முறைக்குப் பதிலாக விண்ணப்பதாரர்களின் தகுதி, ஊதியம், பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விசா வழங்கப்படும் என்ற நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார். இந்த உத்தரவு வருகிற மார்ச் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.
இதற்கிடையே புதிய அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடனின் நிர்வாகம் எச்1பி விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையைத் தாமதப்படுத்துவதாகத் தெரிவித்தது.
எச்1பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என்று ஜோ பைடன் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. இந்த உத்தரவால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் 2022ஆம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் (மார்ச்) 9ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்றத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘எச்1பி விசா விண்ணப்பிப்பதற்கான பதிவுகள் வருகிற மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும். மார்ச் 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
**-ராஜ்**�,