இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நாளை (அக்டோபர் 2) நாடு முழுதும் கொண்டாடும் நிலையில், நாட்டின் தென்கோடி முனையில் இருக்கும் காந்தி மண்டபத்தின் நிலைமை கண்ணீரை வரவழைப்பதாக இருக்கிறது.
மொழிவாரி மாநில பிரிவினைக்கு முன்னாள் கேரள நிர்வாகத்தின் மூலம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. மொழிவாரி மாநில பிரிப்புக்குப் பின்னர் கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைக்கப்பட்டதால்… கேரளா காந்தி மண்டபக் கட்டுமானப் பணியை கைவிட்டு, அந்த மண்டபத்தின் மாடலை லாரியில் வைத்து திருவனந்தபுரத்துக்கு லாரியில் எடுத்துச் சென்றது.
அப்போது அந்த லாரியை வழியில் மறித்துப் போராடி குமரித் தந்தை நேசமணி நடத்திய போராட்டத்தால் மீண்டும் காந்தி மண்டபக் கட்டுமானப் பணிகளை குமரியிலேயே நடத்தி கட்டி முடித்தது கேரள பொதுப்பணித்துறை. வருடத்திலேயே அக்டோபர் 2 ஆம் தேதி மட்டும் காந்தி மண்டபத்துக்குள் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழுமாறு, ,மிகுந்த விஞ்ஞான அறிவோடு வடிவமைத்திருக்கிறார் இக் கட்டிடத்தின் பொறியாளர் அலெக்சாண்டர்.
இப்பேற்பட்ட பெருமைமிக்க இந்த காந்தி மண்டபம் இன்று கவனிப்பாரில்லாமல் சிதிலங்களோடும், பெயர்ந்து விழும் பொக்கைகளோடும் காட்சியளித்துக் கொண்டிருந்தது. குமரி மக்களும் சுற்றுலாப் பயணிகளும், ‘ காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை பத்தி மோடி அமெரிக்காவுல பேசுறாரு. ஆனால் காந்தியோட அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட காந்தி நினைவு மண்டபத்தை யாரும் கண்டுக்கலையே” என்று சோக கீதம் பாடுகிறார்கள்.
குமரி பத்திரிகையாளர்கள் சிலர் உடனடியாக இதை காந்தி மண்டபத்தை நிர்வகிக்கும் குமரி மாவட்ட செய்தித்துறையிடம் சொல்ல, ‘இதை தயவு செய்து செய்தி ஆக்கிடாதீங்க’ என்று அன்புக் கட்டளை போட்டுவிட்டு, இன்று அக்டோபர் 1 ஆம் தேதி காலை அவசர அவசரமாக காந்தி மண்டபத்தின் வெளிப்பகுதியில் மட்டும் பூச்சுப் பணிகளை அரைகுறையாக மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
காந்தி மண்டபத்துக்குள் இன்னும் பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆனால் மத்திய அரசு, மாநில அரசு, தொகுதியின் எம்பி காங்கிரஸ் வசந்தகுமார் என யாருக்குமே இது உறுத்தாமல் இருப்பதுதான் உறுத்துகிறது.
காந்தி நல்ல நாணயம்தான். ஆனால் செல்லாத நாணயமாகிவிட்டாரோ இன்றைய அரசியல் வாதிகளுக்கு?
**-ஆரா**
�,”