hஸ்மார்ட்போன்: சீனாவை முந்துமா இந்தியா?

Published On:

| By Balaji

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக கருதப்படும் இந்தியா, தற்போது குறைக்கப்பட்டுள்ள பெருநிறுவன வரியின் காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தியை உள்நாட்டில் அதிகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தொழில் நிறுவனங்களுக்கான நிறுவன வரி 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததை, 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது நிறுவன வரி இந்தியாவில் அதிகமாக இருந்து வந்தது. தற்போதைய நடவடிக்கைக்குப் பின் அந்த ஒப்பீட்டு அளவு மாறியுள்ளது. ஜப்பான் -30.6, சீனா, தென் கொரியா, இந்தோனேசியா – 25 சதவீதம், மலேசியா -24 சதவீதம், தாய்லாந்து, வியட்னாம் – 20 சதவீதம், சிங்கப்பூர் 17 என்ற அளவிலேயே அந்நாட்டு தொழில் நிறுவனங்கள் தொழில் வரி செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆசிய நாடுகளுக்கு போட்டியாக முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதற்காகவே இந்த வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா தற்போது ஆப்பிள் போன்ற உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதற்கும், ஃபாக்ஸ்கான்(Foxconn) மற்றும் விஸ்ட்ரான்(Wistron) போன்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தக மோதலால், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மாற்று சந்தைகளுக்கு கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர்.

இது குறித்து, சீனாவின் ஒன்-பிளஸ் மொபைல் நிறுவனத்தின் இந்திய தலைவர் விகாஸ் அகர்வால் கூறும் போது, இது இந்தியாவின் பொருளாதாரத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தெளிவான சமிக்ஞையாகும்” என்று கூறினார்.

சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர், பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பொருட்களின் மீதான அதிக கட்டணங்களுக்கு வழிவகுத்தது. இந்த வர்த்தகப் போர், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்தது. அதனால், அதிக கட்டணங்களிலிருந்து தப்பிக்க முன்னணி நிறுவனங்கள் புதிய சந்தைகளைப் பார்க்க ஆரம்பித்தன.

நிலவி வரும் பொருளாதார மந்த நிலையைக் கணக்கில் கொண்டு, இந்தியா ஏற்கனவே முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிடத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வேலை வாய்ப்பிற்கு அதிகளவு உதவும், உழைப்பு மிகுதியாக தேவைப்படும் மின்னணு உற்பத்தியில் இந்தியா தன் கவனத்தை செலுத்தத் தொடங்கியிருக்கிறது.

மத்திய அரசு கடந்த வாரம், தொலைக்காட்சி பேனல்களை இறக்குமதி செய்வதற்கான வரியை ரத்து செய்தது. இதன் மூலம் உள்நாட்டியே தொலைக்காட்சி டிஸ்பிளேக்களை(display) உருவாக்கும் உற்பத்தியை இது அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

சீனாவுக்கு அடுத்தபடியாக , இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உள்ளது. இந்திய செல்லுலார் அசோசியேஷன் (ஐ.சி.ஏ) மேற்கொண்ட ஆய்வின்படி, 2014ஆம் ஆண்டில் 3 மில்லியனில் இருந்த இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி 2017ஆம் ஆண்டில் 11 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் “மேக் இன் இந்தியா” இயக்கத்திற்கு மையமாக ஸ்மார்ட்போன் தொழில் இருப்பதை இங்கே நினைவு கூறலாம்.

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா, சீனாவின் சியோமி ஆகியவை இந்த நிறுவன வரிக் குறைப்பு, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கவும் உள்நாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும் எனக் கூறுகின்றன.

முன்னதாக, இந்தியாவின் பெருநிறுவன வரி விகிதம், உலகிலேயே மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடுகளுக்கு இணையாக இருந்தது. தற்போது நிர்ணயிக்கப்பட்ட புதிய வரி விகிதம் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பிற முன்னணி உற்பத்தி பொருளாதார நாடுகளுக்கு இணையாக குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் பெருநிறுவன வரி விகிதம் 21 சதவீதம், சீனாவின் பெருநிறுவன வரி விகிதம் 25 சதவீதம். இந்தியா தற்போது பெருநிறுவன வரி விகிதத்தை 22 சதவீதமாக குறைத்துள்ளது.

தொலைபேசி காட்சி டிஸ்பிளே பேனல்கள், லித்தியம் செல்கள் மற்றும் கேமரா பாகங்கள் போன்றவற்றை தயாரிப்பவர்களுக்கு இந்த வரிக் குறைப்பு உதவும் என்று தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது வணிகத்தை எளிதாக்கும் நடவடிக்கையாகவும் முதலீட்டாளர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமான வர்த்தகப் போர் இறுக்கமாக இருக்கும் நிலையில், அமெரிக்காவும் இந்தியாவும் நட்பு பாராட்டி வருவது முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி இன்னும் எளிதாக ஈர்த்துள்ளது எனலாம். மேலும், இதன் மூலம் ஸ்மார்ட் போன் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share