சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு மீம் போடுவது போல் பிரபலங்களைத் தரக்குறைவாகக் கிண்டல் செய்யும் மீம்ஸ்களும் வந்துகொண்டிருக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் இதனால் மன வருத்தத்துக்கு ஆளாகின்றனர். அத்தகைய ஒரு மீம், நடிகை ஆத்மிகாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வெளியாகியுள்ளது.
வடிவேலு, விவேக், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்த புகைப்படங்களை அடுக்கி அதன் அருகில் ஆத்மிகாவின் புகைப்படத்தையும் கொண்டு உருவாகியுள்ள மீம்ஸுக்கு ஆத்மிகா பதிலளிக்கும் விதமாக ஒரு பதிவிட்டுள்ளார்.
”இத்தகைய ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிட்டதற்கு முதற்கண் மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. இரண்டாவதாக, இந்தப் பதில் உங்களுக்காக மட்டுமல்ல உங்களைப் போன்ற மனநிலை உள்ள அனைவருக்குமானதே.
இந்தப் படத்தில் நான் நன்றாக இல்லை என்று உணர்வதாக நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது என்னைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறதா? எனக்கு இரண்டுமாகவும் இல்லை. ஆனால் உங்களைப் பற்றி நான் தவறாகவே நினைக்கிறேன், காரணம் ஒரு ஆணோ, பெண்ணோ தோற்றத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு மனநிலை உங்களிடம் சிறுவயது முதலே வளர்ந்து வந்துள்ளது. சகோதரரே தோற்றம் முக்கியமல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “நீங்களாகட்டும் அல்லது யாராகட்டும் ஒரு பெண்ணின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க முடியாது. உயரமா குட்டையா, வெள்ளையா கறுப்பா, குண்டா ஒல்லியா, அசிங்கமா, அழகா என்பதை நீங்கள் தீர்மானிக்கக் கூடாது. ஒவ்வொருவரும் தனித்துவமாக அவர்கள் வழியில் அழகானவர்களே.
நாங்கள் ஆண்களைத் தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்வதில்லை, அவர்கள் எப்படி எங்களை மதிக்கிறார்கள், நடத்துகிறார்கள் என்பதை வைத்தே முடிவெடுக்கிறோம். காரணம் அவர்களது தனித்துவத்துக்காகவே நாங்கள் ஆண்களை மதிக்கிறோம். கடவுள் எங்களுக்கு இதைக் கொடுத்துள்ளார், இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சியடைய எங்களுக்குத் தெரியும். உங்கள் தாயார், சகோதரிகள் அல்லது உங்களுடன் தொடர்புடைய எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அவர்கள் எப்படியிருக்கிறார்களோ அதற்காக மதிப்புக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று தனது பதிவில் எழுதியுள்ளார்.
தமிழில் ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, நரகாசூரன், காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது உதயநிதி நடித்து வரும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.�,