hராணுவ வீரர் கடத்தப்படவில்லை: விளக்கம்!

Published On:

| By Balaji

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றும், அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

புல்வாமா தாக்குதலையடுத்து, காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் ஜம்முவில் உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். புட்காம் மாவட்டம் குவாஸிபோரா கிராமத்தைச் சேர்ந்த முகமது யாசின்பட் என்ற ராணுவ வீரர் கடந்த மாதம் 26ஆம் தேதி விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குச் சென்றார். இந்நிலையில், துப்பாக்கியுடன் வந்த சிலர் முகமது யாசினைக் கடத்திச் சென்றதாக அவரது குடும்பத்தினர் காவல் துறையிடம் புகார் அளித்ததாகத் தகவல் வெளியானது.

இதையடுத்து அவரைத் தேடும் பணிகளைப் பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியதாகக் கூறப்பட்டது. அவர் கடத்தப்பட்டாரா, இல்லையா, எதற்காக கடத்தப்பட்டார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று (மார்ச் 9) அறிக்கையொன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், முகமது யாசினை பயங்கரவாதிகள் வீடு புகுந்து கடத்தியதாக ஊடகங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “அவர் பாதுகாப்பாக இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம். இது போன்ற யூகங்களைத் தயவு செய்து தவிருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாசின் வீட்டுக்குத் திரும்பியதாகவும், அதை உறுதி செய்ய குழு அனுப்பப்பட்டுள்ளது எனவும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

**பலியான வீரர்கள்**

கடந்த காலங்களில் விடுமுறைக்குச் செல்லும் பாதுகாப்புப் படையினரைத் தீவிரவாதிகள் குறி வைத்துத் தாக்கியுள்ளனர். 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆர்ஆர்சி பிரிவில் இருந்த அவுரங்கசீப் ஈத் பண்டிக்கைக்காக வீட்டுக்குச் சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, புல்வாமா பகுதியில் கொல்லப்பட்டார்.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிஎஸ்எஃப் பிரிவில் பணியாற்றிய முகமது ரம்ஜன் பரேயை வீட்டிலிருந்து கடத்திச் சென்று கொலை செய்தனர் தீவிரவாதிகள்.

கடந்த நவம்பர் மாதம் ராணுவ வீரர் இப்ஃரான் அகமது என்பவர் வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share