தமிழ்நாடு முழுவதிலுமிருக்கும் தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் மால்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை குறைத்து அரசாணையை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. திரைப்படங்களுக்கான டிக்கெட் விலையைக் கூட்டியபோது உருவான எதிர்ப்பைவிட, பார்க்கிங் கட்டணக் குறைப்பு அதிக வரவேற்பைப் பெற்றிருப்பதன் மூலம் இத்தனை நாட்களாக பார்க்கிங் கட்டணம் எந்தமாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
தமிழ்நாடு திரைப்படச் சட்டம் 1995இன் பத்தாவது பிரிவின் படி, தமிழக கவர்னர் தமிழ்நாடு திரைப்படச் சட்டம் 1957இல் பின்வரும் திருத்தங்களை செய்திருக்கிறார்.
**மாநகராட்சி மற்றும் சிறப்புநிலை மாநகராட்சி பகுதியில் இருக்கும் தியேட்டர் மற்றும் மால்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை 20 ரூபாயாகவும், இரு சக்கர வாகனங்களுக்கான கட்டணத்தை 10 ரூபாயாகவும், சைக்கிள்களுக்கு இலவசக் கட்டணமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.**
**நகராட்சி மற்றும் சிறப்புநிலை நகராட்சி பகுதியில் இருக்கும் தியேட்டர் மற்றும் மால்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை 15 ரூபாயாகவும், இரு சக்கர வாகனங்களுக்கான கட்டணத்தை 7 ரூபாயாகவும், சைக்கிள்களுக்கு இலவசக் கட்டணமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.**
**பேரூராட்சிகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து பகுதியில் இருக்கும் தியேட்டர் மற்றும் மால்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை 5 ரூபாயாகவும், இரு சக்கர வாகனங்களுக்கான கட்டணத்தை 3 ரூபாயாகவும், சைக்கிள்களுக்கு இலவசக் கட்டணமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.**
சினிமா திரையிடப்படும் திரையரங்கங்களுக்கான கட்டண அறிவிப்பு என்பதால், இந்த புதிய கட்டண சட்டம் சத்யம் சினிமாஸ் போன்று திரையரங்கங்களை மட்டும் கொண்ட மால்களில் மட்டுமே செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்த உண்மைத்தன்மை அறிய ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டபோது **எங்களது தியேட்டர் செயல்படும் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி நிர்வாகத்திடமே பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் இருக்கிறது** என்று கூறப்பட்டது.
எனவே, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சட்டம் டிக்கெட்டைக் காட்டிவிட்டு அரசு அறிவித்திருக்கும் கட்டணத்தை செலுத்தி கடைகள் மற்றும் தியேட்டர்கள் இயங்கும் மால்களுக்குள் அனுமதிக்கப்படுவதாகவே இருக்கும்.
�,”