கர்நாடக சட்டப்பேரவைக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிக்கும் முன்பே பாஜக ஐடி அணித் தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கான ஆயுட்காலம் மே 28ஆம் தேதியோடு நிறைவடைகிறது. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. மே 12ஆம் தேதி வாக்குப் பதிவும் மே 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஓம் பிரகாஷ் ராவத் அறிவித்தார்.
இந்நிலையில், தேர்தல் தேதியை அவர் அறிவிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே பாஜக ஐடி அணித் தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், 12ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் 18ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். வாக்கு எண்ணிக்கைத் தேதியை அவர் தவறாக குறிப்பிட்டிருந்தபோதும் வாக்குப் பதிவுத் தேதியைச் சரியாக குறிப்பிட்டிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது ட்விட்டை அவர் நீக்கினார். தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் தேதி கசிந்தது எப்படி? தேர்தல் ஆணையம் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளதா எனப் பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை, இந்திய ஜனநாயக செயல்முறைகளின் புனிதத்தன்மை ஆகியவை ஆபத்தில் உள்ளன. பாஜகவுக்கு முன்மாதியான தண்டனை வழங்குவதன் மூலமே பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்” என சீத்தாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கர்நாடகத் தேர்தல் தேதியை 11 மணிக்கே அமித் மால்வியா ட்விட் செய்துள்ளார். தேர்தல் தேதி தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு பாஜக ஆலோசனை வழங்குவதையே இது காட்டுகிறது. அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் இயங்க வேண்டும் என விரும்புகிறேன். இது போன்ற சம்பவம் முன்னர் நடந்தது இல்லை” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தகவல் கசிந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். பா.ஜனதா நிர்வாகி அமித் மால்வியா வெளியிட்டது பற்றி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று பதிலளித்தார்.
எனினும், ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான தகவலின் அடிப்பையிலேயே தான் ட்விட் செய்ததாக அமித் மால்வி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் முக்தர் அப்பாஸ் நக்வி, “ஊடகம் ஒன்றின் செய்தி அடிப்படையில் அவர் ட்விட் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தைக் குறைக்க வேண்டும் என்று எந்த நோக்கமும் இல்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஒருவர்கூட இதே கருத்தை டிவிட் செய்துள்ளார். எனினும், மால்வி அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
தேர்தல் தேதி முன்னரே கசிந்தது தொடர்பாக விசாரணை நடத்தக் குழு ஒன்றைத் தேர்தல் ஆணையம் அமைக்கவுள்ளது. இந்தக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.�,”