தடம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனியுடன் மீண்டும் இணையவுள்ளதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான தடம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் தன்யா ஹோப், ஸ்மிருதி, வித்யா பிரதீப், பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படம் திருநெல்வேலி ராம் சினிமாஸ் தியேட்டரில் நேற்று காலை திரையிடப்பட்டபோது அருண் விஜய், மகிழ் திருமேனி, தன்யா ஹோப், ஸ்மிருதி ஆகியோர் வந்தனர். அவர்களைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
பின்னர் ரசிகர்களின் கூட்டத்திற்கு மத்தியில் அருண் விஜய் பேசுகையில், “தடம் திரைப்படம் எனது வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்றுதான் கூறவேண்டும். இப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். ரசிகர்களும் எங்களுக்கு உற்சாகமாக வரவேற்பளித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரசிகர்கள் உற்சாகப்படுத்தினால்தான் என்னால் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடியும்.
மலைமலை, மாஞ்சாவேலு உட்பட சில திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றன. பின்னர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததை என்னால் மறக்க முடியாது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜித், விஜய்யுடன் நடிக்க தயாராக இருக்கிறேன். தற்போது அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். நானும் மகிழ் திருமேனியும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது. அதற்கான அறிவிப்பு இந்தாண்டின் இறுதியில் வெளியாகும்” என்று தெரிவித்தார்.�,