மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த அனுமதித்துத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷைலேஷ் மனுபாய் பார்மர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “மாநிலங்களவைத் தேர்தலில் ஓரு உறுப்பினர் வாக்களிக்காவிட்டால், அவர் சார்ந்த கட்சி அவரை வெளியேற்றிவிடும். ஆனால், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமாக, நீங்கள் (தேர்தல் ஆணையம்) வாக்களிக்காமல் இருக்கும் நடைமுறையை சட்டப்பூர்வமாக்கப் பார்க்கிறீர்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய கட்சியின் உத்தரவின் படி வாக்களிக்க முடியும் அதைத் தவிர்த்து தான் விரும்பும் நபருக்கோ, நோட்டாவுக்கோ வாக்களிக்க விரும்புவதாகக் கூறமுடியாது” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நோட்டாவை ஓரு தேர்வாக பயன்படுத்த சொல்லி அறிக்கை வெளியிடவோ தேர்தல் ஆணையத்தால் இயலாது என்றும் தெரிவித்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 21) தீர்ப்பளிக்கப்பட்டது. மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை விருப்ப தேர்வாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
�,