சிறுமி கொலை: குற்றத்தின் பின்னணி – பகுதி 2
சிறுமி கொலை வழக்கில் சந்தோஷ் குமார் மீது சந்தேக வளையம் விழுந்ததுமே உஷார் ஆகினர் தனிப்படை போலீசார். அவரது சொந்த ஊரான சித்திரைசாவடிக்குச் சென்று விசாரணை நடத்தினர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக சந்தோஷ் குமாருக்குத் திருமணம் நடந்ததும், நடவடிக்கை பிடிக்காமல் போனதால் மூன்று மாதங்களிலேயே அவரது மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றதும் தனிப்படையினர் விசாரணை செய்ததில் தெரிய வந்தது.
மனைவியின் பிரிவுக்குப் பிறகு, உள்ளூர் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சுற்றித் திரிந்துள்ளார் சந்தோஷ் குமார். அந்த நேரத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றால் செலவுக்குக் காசு கொடுக்கும் அமைப்பொன்றில் சேர்ந்துள்ளார். சில நாட்கள் கழித்து, வடகோவையில் உள்ள ஒரு தனியார் இன்டோர் டெகரேட்டர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கைதாகும் வரை, அங்கு அவர் பணியாற்றி வந்துள்ளார்.
சந்தோஷ் குமாருக்கு குடிப்பழக்கத்துடன் கஞ்சா புகைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. அவ்வப்போது, தன்னுடைய தாய்வழிப் பாட்டி வாழ்ந்த கஸ்தூரிநாயக்கன்பாளையத்துக்குச் சென்று வருவார். அங்கும் அவருடன் குடித்துக் கும்மாளம் போட நண்பர்கள் குழு உள்ளது என்ற தகவலைத் தவிர வேறொன்றும் தனிப்படையினருக்குக் கிடைக்கவில்லை. இதன்பிறகு, இரண்டாகப் பிரிந்து விசாரணை நடத்தியது தனிப்படிக் குழு.
ஐந்து மாதங்களுக்கு முன்பாக சந்தோஷ் குமாரின் பாட்டி அய்யம்மாவின் கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு, தனியாக இருந்த பாட்டியைச் சந்திக்க அவ்வப்போது வந்துள்ளார் சந்தோஷ் குமார். அய்யம்மா செய்துதரும் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு, அங்கேயே டேரா போட்டுள்ளார். கடந்த 25ஆம் தேதியன்று இரவு 9 மணிக்கு சந்தோஷ் குமாரின் பாட்டி மரணமடைந்தார் என்பதும், அன்றிரவு 2 மணிக்கே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இரவு 2 மணிக்குப் பிறகு, சந்தோஷ் குமாரின் பெற்றோர் இருவரும் அந்த வீட்டிலேயே இருந்துள்ளனர். அவர்களுடன் சந்தோஷ் குமாரும் இருந்தார் என்பது தனிப்படை போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதன்பிறகு, சிறுமியின் சடலத்தைச் சுற்றியிருந்த பழைய டிசர்ட்டை வைத்து விசாரணை முடுக்கப்பட்டது. இன்டோர் டெகரேட்டர் நிறுவனத்துக்குப் போன காவல் துறை அதிகாரிகள் விசாரித்ததில், சந்தோஷ் குமார் டிசர்ட் போடும் பழக்கமுள்ளவர் என்பது தெரிய வந்தது. வேலைக்கு வரும்போது ஒரு உடையும், வேலை செய்யும் இடத்தில் மாற்று உடையும் வைத்துகொண்டு இருப்பவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், சிறுமியின் உடலைச் சுற்றியிருந்த டிசர்ட்டை சந்தோஷ் குமார் பயன்படுத்தியதை அங்கிருந்த யாரும் பார்க்கவில்லை.
ஆனாலும், பல சிக்கலான வழக்குகளை விசாரித்துக் கண்டுபிடித்த காவல் துறையின் மூத்த அதிகாரிகளுக்கு சந்தோஷ் குமார் தான் கொலையாளி என்ற எண்ணம் வலுவாக இருந்தது. ஆனால், அவரோ தனக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தமில்லை என்று 4 நாட்களாக சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்துள்ளார். கடந்த மார்ச் 30ஆம் தேதி இரவு கோவை அரசு மருத்துவமனைக்கு சந்தோஷ் குமாரைக் கூட்டிச் சென்றனர் போலீசார். அங்கு, அவரது ரத்தம் மற்றும் விந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன் முடிவில், கோவை சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தது அவர் தான் என்பது உறுதியானது.
இதன் பின்னரே, போலீசார் தங்களது வழக்கமான விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அப்போது, பல விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார் சந்தோஷ் குமார்.
தாத்தா இறந்த பின்னர் பாட்டி அய்யம்மாவுக்குப் பாதுகாப்பாக, அவருடைய வீட்டிலேயே தங்கியுள்ளார். இரண்டு நாட்கள் வெளியூர் போவதும், அதன்பின் இரண்டு நாட்கள் வீட்டில் இருப்பதுமாக இருந்துள்ளார் சந்தோஷ் குமார். அப்போது தான், பாட்டி வீட்டின் வழியாகக் கடைக்கும் பள்ளிக்கும் சென்றுவரும் வனிதாவின் மூத்த பெண் குழந்தையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே தொடர்கதையாகி சாக்லேட், பிஸ்கட் வாங்கிக் கொடுத்து இரண்டு முறை அந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார் சந்தோஷ் குமார்.
கடந்த 25ஆம் தேதியன்று மாலை கடைக்கு வெற்றிலைப் பாக்கு வாங்கச் சென்றுள்ளார் அந்த சிறுமி. அவரை வழி மறித்து வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார் சந்தோஷ் குமார். அவரிடம் இருந்து தப்பிச்செல்லும் நோக்கில், வேகமாகக் கடையை நோக்கி ஓடியுள்ளார் அந்த சிறுமி. கால் தடுக்கிக் கீழே விழுந்த சிறுமியைத் தூக்கிய சந்தோஷ் குமார், சிறுமியின் வாயைப் பொத்தி பாட்டியின் வீட்டுக்குள் கொண்டு சென்றுள்ளார். பழைய துணியை சுருட்டி குழந்தையின் வாயில் திணித்து, அவரைப் பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.
கஞ்சா போதையில் இருந்ததால், நடந்த கொடூரத்தை அந்த கொடியவனின் மூளையில் இருந்த வெறி உணர வைக்கவில்லை. வெகுநேரம் ஆனபிறகே, குழந்தையைக் காணவில்லை என வனிதாவும் அவருடைய பெற்றோரும் தேடியலைந்தது சந்தோஷ் குமாருக்குத் தெரிந்தது. இப்போது குழந்தை வெளியே போனால் உள்ளே நடந்ததைப் பற்றி வனிதாவிடம் சொல்லிவிடும் என்று பயந்த சந்தோஷ் குமார், அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இந்த கோரம் அனைத்தும் அவர் இருந்த சிறிய வீட்டின் ஒரு அறையிலேயே நடந்துள்ளது. இன்னொரு அறையின் ஒரு மூலையில் பழைய பாய், போர்வைகள், கிழிந்த சாக்குப்பை, பழைய துணிமணிகள், லுங்கி என்று அனைத்தையும் போட்டு சிறுமியின் உடலை மூடி வைத்துள்ளார் சந்தோஷ் குமார். சிறுமியைக் காணவில்லை என போலீசார் தேடிக் கொண்டிருந்தபோது, கட்டிலில் படுத்திருந்த தன்னுடைய பாட்டி உயிரிழந்ததாகச் சொல்லி அக்கம்பக்கம் இருந்தவர்களை எல்லாம் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அய்யம்மாள் சடலத்தைப் பெரிய அறையில் வைத்ததும், அங்கிருந்த பாத்திரங்கள், துணிமணிகள் எல்லாவற்றையும் பின்புறம் இருந்த சிறிய அறையில் கொட்டினார் சந்தோஷ் குமார். சிறுமியின் சடலத்தை யார் கண்ணிலும் படாமல் மறைத்தார். ஊர் பெரியவர்கள் பேசி முடித்து, இரவு 2 மணியளவில் பாட்டி அய்யம்மாவின் சடலத்துக்கு ஈமச்சடங்குகள் செய்யப்பட்டன.
உள்ளூர் பெண்கள் எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே போன பின்பு, விடியற்காலை 4 மணிக்கு பாட்டியின் பழைய துணிகளைச் சுடுகாட்டில் போட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லி, உள் அறையிலிருந்த துணி மணிகளை எல்லாம் சுருட்டித் தூக்கிக்கொண்டு சென்றுள்ளார். சுடுகாட்டுக்குப் போகும் வழியில் போலீசாரோ, ஊர் மக்களோ இருந்தால் சிக்கல் வரும் எனப் பயந்த சந்தோஷ் குமார், இரண்டு வீடுகள் தள்ளியிருந்த ஒரு சிறிய சந்தில் டிசர்ட்டில் சுற்றி சிறுமியின் சடலத்தை வைத்துள்ளார். மீதி பழைய துணிகளை எல்லாம் கொண்டுபோய் சுடுகாட்டில் போட்டுவிட்டுத் திரும்பியுள்ளார்.
சந்தோஷ் குமாரின் வீட்டில் துக்க காரியம் நடந்ததால், சிறுமியைத் தேடியவர்கள் யாரும் அந்த வீட்டில் இருந்தவர்களைச் சந்தேகிக்கவில்லை. இதைச் சரியாகப் பயன்படுத்தி நான்கு நாட்களாக அவர் போலீசாரை ஏமாற்றி வந்துள்ளார். தற்போது அவரது வாக்குமூலம் போலீசாரால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவச் சான்று படியும் அவர் குற்றம் செய்தது பொருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன குழந்தையை ஒவ்வொரு வீடாகத் தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று தெரிந்ததும், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பாட்டியையும் சந்தோஷ் குமார் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலையைத் தனிநபர் ஒருவரால் செய்திருக்க முடியாது எனவும், உடற்கூறு ஆய்வில் பலர் கூட்டாகச் சேர்ந்து வல்லுறவு கொண்டதாகவும் எதிர்க்கருத்துகள் எழுந்துள்ளன. சிலரைக் காப்பாற்ற போலீசார் முயற்சிக்கின்றனர் என்று பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே சிறுமியின் தாய் வனிதாவுடன் இருந்து வழக்கு விசாரணையை வேகப்படுத்தி வந்த இந்திய மாதர் சங்கச் செயலாளர் ராதிகாவிடம் பேசினோம்.
“சிறுமியின் உடற்கூறு அறிக்கையில் வல்லுறவு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவரா அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களா என்பதைத் தெரிந்துகொள்ள அடுத்தடுத்துப் பல ஆய்வுகள் செய்ய வேண்டும். இதனை போலீசார் முதலிலேயே தெரிவித்திருந்தனர். சிறுமி காணாமல் போனதில் இருந்து நாங்கள் அந்த ஊரிலே தான் இருந்து வருகிறோம். போலீசாரின் விசாரணை நடக்கும்போதும், நாங்கள் எல்லாம் அங்கேதான் இருந்தோம். இதில் வேறு சிலருக்குத் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. சந்தோஷ் குமார் பாட்டியின் மரணத்தில் கொஞ்சம் சந்தேகம் உள்ளது. அதை போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
நம்மையெல்லாம் பதைபதைக்க வைக்கும் இந்த கொடூரம் நடக்க மது போதையும் ஒரு காரணம் என்றார். மதுவும் அதற்கு அடிமையாகிக் கிடக்கும் ஆண்கள் சமூகமும் தான் இந்த சிறுமியின் பலிக்குக் காரணம் என்று கூறினார். “அந்த பெண் குழந்தையின் அப்பா, குடும்பத்தைக் கவனிக்காத ஒரு பொறுப்பில்லாத குடிகாரன். குழந்தையைச் சீரழித்தவனும் வாழத் தகுதியில்லாத ஒரு குடிகாரன். இப்படி கெடுகெட்டவர்களுடன் எப்படி ஒரு பெண் பாதுகாப்புடன் வாழ முடியும்” என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினார் ராதிகா.
[பாபநாசம் படத்தை மிஞ்சிய கோவை கொலையாளி -பகுதி 1](https://minnambalam.com/k/2019/04/01/49)
�,”