உத்தரப் பிரதேசத்தில் பசுவதை செய்ததாகக் கூறி ஒருவரை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது அவருடன் இருந்தவரும் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த வழக்கை விசாரித்து வரும் ஹாப்பூர் போலீஸ் அதிகாரி சங்கல்ப் சர்மா பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் மீரட்டிற்கு அருகில் பஜ்ஹேரா குர்து கிராமத்தில் காசிமும்(வயது 45) அவரது நண்பர் சமயதீனும் (வயது55) தங்களின் வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுவை விரட்டியுள்ளனர். இதனை பார்த்த சிலர் பசுவதை செய்வதற்காக அவர்கள் பசுவைக் கடத்துவதாகச் செய்தியை பரப்பியுள்ளனர். இந்த செய்தி பரவியதும் உடனே 30ற்கும் மேற்பட்டவர்கள் காசிமும் அவரது நண்பரும் நின்றுகொண்டிருந்த வயலில் கூடி சராமாரியாக இருவரையும் கம்புகளையும் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் காசிம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அவரது நண்பர் கவலைக்கிடமாக உள்ளார். ஆனால் இது பசுவதைக்காக நடத்தப்பட்ட தாக்குதலா என்பது உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரித்துவருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அதில் ஒரு கும்பல் காசிமையும் அவரது நண்பரையும் தாக்குவதையும் பின்னர்,அவர்கள் விழுந்து கிடப்பதையும் காட்டுகிறது. அந்தக் காட்சியில் சுற்றி நிற்பவர்கள் பசுவதைக்கு இது சரியான தண்டனை என்று கோஷமிடுகிறார்கள். ஒரு சிலர் படுகாயத்துடன் விழுந்து கிடக்கும் காசிமின் நண்பருக்கு தண்ணீர்கூடக் கொடுக்கக் கூடாது என்று கூறுவதும் காட்சியில் பதிவாகியுள்ளது.
�,