பாரத்மாலா திட்டத்தின் கீழ், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் சாலை அமைக்கும் பணியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பாதியளவு மட்டுமே நிறைவேறியுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பாரத்மாலா திட்டத்தின் கீழ் சராசரியாகத் தினசரி 41.09 கிலோ மீட்டர் அளவிலான சாலை அமைக்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், நவம்பர் மாத நிறைவில் தினசரி சராசரியாக 22.55 கிலோ மீட்டர் அளவிலான சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது பாரத்மாலா திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 83,000 கிலோ மீட்டர் அளவிலான சாலையை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் சாலையமைப்புப் பணிகள் மந்தமாகியுள்ளதால் இலக்கு நிறைவேறுவது கடினமாகியுள்ளது. இந்த இலக்கை அடையவேண்டுமானால் தினசரி 56.85 கிலோ மீட்டர் அளவிலான சாலை அமைக்கப்பட வேண்டும்.
முன்னதாக ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 25.21 கிலோ மீட்டர், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 20.80 கிலோ மீட்டர் அளவிலான சாலை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி இக்ரா நிறுவன கார்பரேட் ரேட்டிங்ஸ் பிரிவு துணைத் தலைவரான கே.ரவிச்சந்திரன் DNA MONEY ஊடகத்திடம் கூறுகையில், “தற்போதைய நிலையில் தினசரி சராசரியாக 23 கிலோ மீட்டர் அளவிலான சாலை மட்டுமே அமைக்கப்பட்டுவருகிறது. சென்ற ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சாலை அமைப்புப் பணிகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நான்காம் காலாண்டில் மழை போன்ற எவ்வித பாதிப்பும் இருக்காது என்பதால் சாலைப் பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.�,