நவம்பர் 5ஆம் தேதி, அக்ஷய் குமார் நடிக்கும் மிஷன் மங்கள்யான் படம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் வெளியிடப்பட்ட நிலையில் அந்தப் படம் பற்றிய முக்கியத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
2.Oவில் பிஸி காட்டிவரும் நடிகர் அக்ஷய் குமார், இந்தியில் மிஷன் மங்கள்யான் எனும் படத்தில் தற்போது நடிக்கவுள்ளார். தனது புதிய மூன்று படங்களை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபில்ம்ஸ் இணைந்த கூட்டணிக்கு நடித்துக்கொடுப்பது என அக்ஷய் முடிவெடுத்துள்ள நிலையில், இந்தப் படம் அதில் முதல் படமாக அமைந்துள்ளது. ஜெகன் ஷக்தி இயக்கவுள்ள இதில் வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, தப்ஸி பன்னு என ஏற்கெனவே இந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ள நிலையில், நடிகை நித்யா மேனனும் இதன் வாயிலாக இந்தியில் அறிமுகம் ஆகிறார்.
மிஷன் மங்கள்யான் விண்ணில் செலுத்தப்பட்ட 2013, நவம்பர் 5ஆம் தேதியைக் குறிப்பிடும் விதமாக கடந்த 5ஆம் தேதியன்று இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டது. இது விண்வெளியை மையமாகக் கொண்டு உருவாகும் படம் எனும் காரணத்தால் படமாக்க நாட்கள் ஆகும், எனவே அடுத்த ஆண்டு இதேபோல் நவம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அக்ஷய் குமார் தற்போது ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் படம் குறித்து கூறியுள்ள அவர் “இப்படம் 2019ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.�,