hதலித் வாக்குகளை சிதறடிக்க சதி: மாயாவதி

Published On:

| By Balaji

வரும் மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் அசாத்தை வேட்பாளராக நிறுத்தி தலித் வாக்குகளை சிதறடிக்க பாஜக சதித்திட்டம் தீட்டுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், “தலித் வாக்குகளை சிதறடித்து அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் இழிவான நோக்கத்துடன் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் அசாத்தை வேட்பாளராக நிறுத்த பாஜக சதித்திட்டம் தீட்டியுள்ளது. இந்த அமைப்பே (பீம் ஆர்மி) பாஜகவின் சதியால் தலித்துகளுக்கு எதிரான மனநிலையுடன் உருவாக்கப்பட்டதுதான். இப்போது அந்த அமைப்பு இழிவான அரசியலில் ஈடுபடுகிறது.

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகரை பகுஜன் சமாஜ் கட்சியில் சேரவைக்க பாஜக கடுமையாக முயன்றது. ஆனால் பாஜகவின் சதித்திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்றன. சர்வாதிகார, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான, கொடுங்கோல் பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டியது தேச நலனுக்கு மிகவும் முக்கியமாகும். உங்களது வாக்குகள் வீணாகிவிடாதபடி உறுதி செய்துகொள்ளுங்கள். இது எனது வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share