�
ஜனவரி மாத இணைய வேகத்தில் 4ஜி டவுன்லோடு சேவையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், அப்லோடு சேவையில் ஐடியா நிறுவனமும் முதலிடத்தில் இருப்பதாக டிராய் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையமான டிராய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சராசரி டவுன்லோடு வேகம் விநாடிக்கு 18.08 மெகா பைட்டாக உள்ளது. அதேசமயத்தில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம் விநாடிக்கு 9.5 மெகா பைட்டாக உள்ளது. வோடஃபோன் நிறுவனத்தின் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் விநாடிக்கு 6.7 மெகா பைட்டாகவும், ஐடியா நிறுவனத்தின் சராசரி டவுன்லோடு வேகம் விநாடிக்கு 5.5 மெகா பைட்டாகவும் உள்ளது.
அதேபோல 4ஜி அப்லோடு வேகத்தில் தொடர்ந்து ஐடியா நிறுவனமே முதலிடம் பிடித்து வருகிறது. ஜனவரி மாதத்தில் ஐடியா நிறுவனத்தின் சராசரி அப்லோடு வேகம் விநாடிக்கு 5.8 மெகா பைட்டாக உள்ளது. வோடஃபோன் நிறுவனத்தின் 4ஜி சராசரி அப்லோடு வேகம் விநாடிக்கு 5.4 மெகா பைட்டாகவும், ஜியோ நிறுவனத்தின் 4ஜி சராசரி அப்லோடு வேகம் விநாடிக்கு 4.4 மெகா பைட்டாகவும், ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சராசரி அப்லோடு வேகம் விநாடிக்கு 3.8 மெகா பைட்டாகவும் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஏர்டெல், வோடஃபோன் & ஐடியா நிறுவனங்கள் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை வழங்குகின்றன. ஆனால் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை மட்டுமே வழங்குகிறது. இந்தியாவில் வேகமான 4ஜி சேவையை வழங்கும் நிறுவனமாகக் கடந்த 13 மாதங்களாக ஜியோ நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.�,