சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள மஸ்ஸாஜ் பார்லரில் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட ஆறு பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை நீலாங்கரைக்கு அருகிலுள்ள வெட்டுவாங்கேணியில் மஸ்ஸாஜ் பார்லர் ஒன்று இயங்கிவருகிறது. இங்கு நுழைந்த திருட்டு கும்பல் பணத்தைத் திருடியது மட்டுமல்லாமல் அங்கு பணியாற்றும் பெண்கள் மற்றும் மஸ்ஸாஜ் செய்யவந்தவர்களை வீடியோ எடுத்துள்ளது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். இருவர் மட்டுமே பார்லருக்குள் கைதுசெய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய நான்கு பேரையும் காவல் துறையினர் திரைப்பட பாணியில் விரட்டிப் பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுவர் ஏறித் தப்பிக்க முயன்ற மூவருக்குக் கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 26 வயதான தர்மா, திருவான்மியூரைச் சேர்ந்த எம்.குமரன் (29), நீலாங்கரைக் குப்பத்தைச் சேர்ந்த எஸ்.செல்வம் (23), எஸ்.பிரபாகரன் (23), பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஆர்.சதீஷ் (21) மற்றும் பி.விக்னேஷ் (21) ஆகிய ஆறு பேர்தான் திருட்டில் ஈடுபட்டு கைதானவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் விக்னேஷும் சதீஷும் கல்லூரி பயிலும் மாணவர்களாவர். நீலாங்கரையில் திருட்டில் ஈடுபட்டு கைதான இந்த திருட்டு கும்பல் சென்னை முழுவதும் பல்வேறு மஸ்ஸாஜ் பார்லர்களில் கைவரிசை காட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் மீது ஐபிசி 341, 294, 323, 324, 336, 392, 397, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மஸ்ஸாஜ் பார்லர்களில் இந்த கும்பல் அடிக்கடி திருட்டில் ஈடுபட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சமீப காலமாகவே மஸ்ஸாஜ் பார்லர்கள் அதிகமாக முளைத்து வருகின்றன. அங்கீகாரம் இல்லாமல் தெருவுக்குத் தெரு மஸ்ஸாஜ் பார்லர்கள் திறக்கப்பட்டு வந்தது. இந்த மஸ்ஸாஜ் பார்லர்களில் தவறான தொழில்கள் நடப்பதாகவும், காவல் துறை சார்பில் ஆதரவு வழங்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன. இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் சென்னை மாநகர குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தியின் உத்தரவின் பேரில் மஸ்ஸாஜ் பார்லர்களில் சோதனைகள் நடத்தப்பட்டும், அங்கீகாரம் இல்லாத பார்லர்கள் மூடப்பட்டும் வருகின்றன.
இதுபோன்ற சூழலில் தற்போது நீலாங்கரை மஸ்ஸாஜ் பார்லரில் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பார்லர்களில் திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழும் போது அது குறித்துக் காவல் துறையில் புகாரளிக்காமல் தவிர்க்கின்றனர்.
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
�,”