சென்னை ரயில் சரக்கு போக்குவரத்தில் புக் செய்யப்படும் சரக்குகளை திருடி வெளியே விற்கும் பெரும் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த செவ்வாயன்று ஒரு ரயில்வே தொழிற்சங்கத்தை சேர்ந்த 5 உறுப்பினர்கள் சில சரக்குகளை எரித்து கொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட ஊழல் நடந்து வருவது வெளியே தெரிய வந்துள்ளது. அந்த 5 பேரும் ஊழல் நடந்ததற்கான தடயங்களை மறைக்க அவற்றை எரித்து கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீண்ட காலமாக இந்த ஊழல் நடந்து வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ரயில் சரக்கு போக்குவரத்து துறையினர் மற்றும் அத்துறையுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஊழல் தொடர்பாக, தெற்கு ரயில்வேத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது:
சென்னை சென்ட்ரல் ரயில்வே சரக்கு பதிவு அலுவலகத்தில் புக் செய்யப்படும் மொத்த சரக்கில் ஒரு பகுதியை மட்டும் புக் செய்துவிட்டு அந்த சரக்கின் மீதியை வெளியே சந்தையில் விற்று விடும் பெரும் ஊழல் வெகுநாட்களாக நடந்து வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் புக் செய்யும் சரக்கில் ஒரு பகுதி மட்டுமே சேர வேண்டிய இடத்திற்கு போய்ச் சேரும். மீதி சரக்குகள் திருட்டுச்சந்தையில் விற்கப்பட்டு விடும்.
ஒரு வாடிக்கையாளர் தான் அனுப்பிய சரக்குகளில் குறைவான அளவே போய்ச் சேர்ந்தது குறித்து புகார் அளித்ததால் நடந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு்ள்ளது. அந்த வாடிக்கையாளர் திருப்பூரிலிருந்து பனியன்களைக் கொண்ட 30 பண்டல்களை ஹவுராவுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸில் அனுப்பியுள்ளார். 30 பண்டல்களில் 19 பண்டல்கள் மட்டுமே போய்ச் சேர்ந்துள்ளன. ஒவ்வொரு பண்டலிலும் 1 லட்ச ரூபாய் மதிப்பு வாய்ந்த சரக்குகள் இருந்துள்ளன. ஆனால் அந்த வாடிக்கையாளருக்கு 30 பண்டல்கள் திருப்பூரிலிருந்து அனுப்பப்பட்டதாக பனியன் தயாரிப்புக்கம்பெனி பில் அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த வாடிக்கையாளர் தலைமை வணிகத்துறை ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆய்வாளர் கடந்த செவ்வாயன்று ரயில் சரக்கு புக் செய்யும் இடத்தில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கே அனுப்பாமல் அலுவலகத்தில் கிடந்த 11 பண்டல்களையும் கைப்பற்றியுள்ளார். இதனை அறிந்த அந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் யுவராஜ் என்பவரின் தலைமையில் கூடி நடந்த ஊழலுக்கு ஆதாரமாக இருந்த அந்த 11 பண்டல்களையும் எரிக்க முயற்சித்துள்ளனர். இதைத் தடுக்க முயன்ற வணிகத்துறையினருக்கும் அந்த ஐவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உடனே ரயில்வே போலீசாருக்கு புகாரளிக்கப்பட்டது
இதனைத்தொடர்ந்து சரக்குகளை எரித்தவர்கள் என யுவராஜ், கருப்பசாமி,அந்தோணி டி குரூஸ்,தியாகராஜன் மற்றும் காதர் பாட்சா ஆகிய 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சரக்குகளின் மொத்த மதிப்பு 11 லட்ச ரூபாயாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது நீண்ட நாட்களாக நடைபெறும் ஊழல் என்றும் இவ்விசாரணையின் முடிவில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரலாம் என ரயில்வே சரக்கு போக்குவரத்து துறையின் பெயரிட விரும்பாத ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.�,