சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமானங்களில் அதிரடிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மழைக்காலம் தொடங்கவுள்ளதையடுத்து, சென்னையிலிருந்து உள்நாட்டுக்குள் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல கட்டணச் சலுகையை விமானச் சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி ஜூலை 30 முதல் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ரூ.1,450 முதல் ரூ.2,215 வரையிலும், கொச்சிக்கு ரூ.1,307 முதல் ரூ.2,730 வரையிலும், மதுரைக்கு ரூ.1,397 முதல் ரூ.1,896 வரையிலும், தூத்துக்குடிக்கு ரூ.3,175 முதல் ரூ.3,229 வரையிலும் பயணிக்கலாம்.
இந்தக் கட்டண முறையில் அடுத்த ஒரு மாதத்துக்கு பெரும்பாலான நாட்களில் மேற்கண்ட சேவைகளுக்கு ரூ.1,700 முதல் ரூ.2,000 வரை மட்டுமே கட்டணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு முன்பதிவுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு பேருந்துகள் மற்றும் ரயில்களைவிடப் போக்குவரத்துக்கான சிறந்த தேர்வாக விமானப் பயணம் இருக்கும் என்று விமானச் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு விமானச் சேவைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள்தான் இந்தச் சலுகைகளை அறிவித்துள்ளன. பொதுவாக, சாதாரண நாட்களில் மேற்கண்ட வழித் தடங்களில் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும். தனிப்பட்ட பயணங்களை ஊக்குவிக்கும் விதமாக இதுபோன்ற கட்டணச் சலுகைகளை விமானச் சேவை நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அளித்து வருகின்றன. இந்த வருடம் இச்சலுகைகள் செப்டம்பர் மாத இறுதி வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
�,