Hசாக்கு எப்போதும் வேண்டாம்!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி!

“சாக்கு ஓட்டத்துக்கு வர்றவங்க எல்லாரும் முதல்ல பேரை ரிஜிஸ்டர் பண்ணுங்க” என்ற சத்தம் இப்போதும் அவ்வப்போது மனதுக்குள் கேட்கும். எனது ஊரான கயத்தாற்றில் உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் அந்தப் போட்டிகளைக் காணச் சென்றிருந்தாலும், சாக்கு ஓட்டப் போட்டியை மட்டும் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பார்த்ததாக நினைவு.

பள்ளிகளில், வசிக்கும் பகுதிகளில் விழாக்காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகளில் சாக்கு ஓட்டமும் ஒன்றாக இடம்பெறும். சணலினால் ஆன பெரிய பைக்கு சாக்கு என்று பெயர். கோணிப்பை அல்லது சணல் பை என்று சொல்லுவர். மூன்றடிக்கும் மேல் உயரமுள்ள சாக்குப் பைக்குள் ஏழு அல்லது எட்டு வயதுச் சிறுவர்கள் மறைந்துகொள்ள முடியும். இந்த சாக்குக்குள் நின்றுகொண்டு குதித்து குதித்து முன்னேறுவதுதான் மேலே சொன்ன விளையாட்டு.

சிறு வயதில் நான் ஒருபோதும் சாக்கு ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டதில்லை. வீட்டுக்குள் ஆட முயன்று கீழே விழுந்திருக்கிறேன். ஆனால், மனதிற்குள் பலமுறை அந்த நினைவுகள் மேலெழுந்து என்னை ஏதோ ஒரு சாக்குப் பைக்குள் தள்ளியிருக்கின்றன. மிகக் கடினமான காலகட்டத்திலிருந்து விடுபடும்போது தோன்றும் மனநிலையை, சாக்கு ஓட்டத்தில் வெற்றி பெறும்போது கிடைக்கும் திருப்தியாகவே எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

இப்படி நேர்மறையான எண்ணத்தைத் தருவது போன்றே, எதிர்த் திசையிலும் இந்த வார்த்தை வேறொரு அர்த்தத்தைக் காட்டியுள்ளது.

சாக்கு என்பதற்குக் காரணம் சொல்லுதல் அல்லது வீண் காரணம் சொல்லுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். கலகலப்பு படத்தில் ‘வாத்யாரே நான் வேணா சுகர் மாத்திரை சாப்பிட்டு வரட்டா’ என்று சந்தானத்திடம் தளபதி தினேஷ் சொல்வது போன்று, முக்கியமான தருணங்களில் சாக்கு சொல்லி விடுபட நினைப்பது பலரது வழக்கமாக உள்ளது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் ஏதாவது ஒரு சாக்கு சொன்னால் என்னதான் செய்வது என்பதே இணை மீது மற்றொருவர் கோபம் கொள்ளும் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. ‘சாக்கு சொல்லாதீங்க, செஞ்சு காட்டுங்க’ என்பதே அது மாதிரியான சூழல்களில் இறுதி வார்த்தைகளாக ஒலிக்கின்றன.

உண்மையைச் சொன்னால், நாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் சாக்குகளைச் சாக்குப் பையில் கட்டிக்கொண்டு துள்ளி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தில் நாம் பெறும் வெற்றிகளால் எந்தப் பலனும் இல்லை. அடர்த்தி கூடிய சாக்குகளை ஸ்டாக் வைத்திருப்பதைவிட, காலியான சாக்குப்பை போன்று மனதை வைத்துக்கொண்டு துள்ளியோடுவது பெரும்பாலும் பலன்களை மட்டுமே தரும்.

முடிவில்லாத இந்த ஓட்டத்தில், தரையிலிருந்து எம்பிய கால்கள் மீண்டும் தரையை அடைவதே வெற்றிதான். ஏனென்றால், ஏதோ ஒன்றினால் வாழ்க்கை கட்டுண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு வாழ்வோர் எல்லாருமே ஒரு வகையில் சாக்கு ஓட்டத்தில் பங்கேற்பாளர்கள்தாம்.

**- பா.உதய்**

**

மேலும் படிக்க

**

**

[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)

**

**

[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share