இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வேலை உருவாக்கம் சற்று மந்தமாகவே இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
2018-19ஆண்டுக்கான இந்தியாவின் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் குறித்த ஆய்வறிக்கை *டீம்லீஸ்* நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த 750 முதலாளிகள் மற்றும் 2,500 பணியாளர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் அக்டோபர் – மார்ச் மாதங்களில் பணியமர்த்தும் நடவடிக்கை 92 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இதன் விகிதம் 95 சதவிகிதமாக இருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் வேலை உருவாக்கம் மந்தமாகவே இருக்கும் என்று இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேச நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் அதிகளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. அதாவது 94 சதவிகிதம் அளவு முதலாளிகள் தங்களது நிறுவனத்தில் கூடுதலான வேலைவாய்ப்புகள் வழங்குவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வேலை உருவாக்கத்தில் மின்சாரம் மற்றும் ஆற்றல் துறையில் 4 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பட்டம் பெற்று புதிதாக வேலைதேடுவோருக்கான வேலைவாய்ப்புகள் 16.3 சதவிகித வளர்ச்சியுடன் இருக்கும் எனவும், இதனால் வேலை தேடுவோரின் நம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் டீம்லீஸ் சர்வைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான ரீத்துபர்னா சக்ரபோர்த்தி, *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.�,