இந்த ஆண்டுக்கான காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் மகாராஷ்டிர மாநில விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
2018 ஜூலை முதல் 2019 ஜூன் வரையிலான நடப்பு பயிர் பருவத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 99.92 லட்சம் டன் அளவிலான காய்கறிகள் மட்டுமே உற்பத்தியாகும் என்று தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மதிப்பீடுகள் கூறுகின்றன. அதேபோல, பழங்கள் உற்பத்தியும் சென்ற ஆண்டில் 123 லட்சம் டன்னிலிருந்து இந்த ஆண்டில் 116 லட்சம் டன்னாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வறட்சி காரணமாகவும், மாறுபட்ட வானிலை காரணமாகவும்தான் காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் சரிவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் *எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்திடம் பேசுகையில், “மகாராஷ்டிராவில் வறட்சி சூழல் காரணமாகக் காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி சரியும் சூழல் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நீர்ப்பாசன வசதிகள் போதிய அளவில் இல்லாததால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விதைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவே இல்லை. ரபி பருவ பயிர் விதைப்பும் சென்ற ஆண்டை விட 59 சதவிகிதம் குறைந்துள்ளது. போதிய மழைப்பொழிவு இல்லாததால் மண்ணில் விவசாயத்துக்கான போதிய ஈரப்பதம் இல்லை. விவசாயிகள் பலர் காய்கறி உற்பத்தியை விடுத்து வேறு தொழில்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.�,