குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், இடைக்கால அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்ய மத்திய குற்றப் பிரிவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு 68 பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வு நடத்தியது. அப்போது, சில விடைத்தாள்களை எடுத்துத் திருத்தங்கள் செய்து, மீண்டும் அவை வைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய குற்றப் பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் ஏதும் உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மோசடி நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளதால் தான் டிஎன்பிஸ்சி அதிகாரிகள் 4 பேரைக் கைது செய்துள்ளதாக, மத்திய குற்றப் பிரிவு தரப்பில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போலோ பயிற்சி மையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்க், மொபைல் போன், கம்ப்யூட்டர்கள் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், செல்போனில் இருந்த குரல் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும், இந்த ஆய்வுகளின் அறிக்கையைத் தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் தேவைப்படும் என்றும் மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
வழக்கின் விசாரணை தற்போது எந்த நிலையில் உள்ளது; என்னென்ன ஆவணங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன; இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியது மத்திய குற்றப் பிரிவு. அதைப் பொறுத்து கால அவகாசம் வழங்க வேண்டுமென, அதன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், நாளை மறுநாள் விசாரணை நடைபெறுமென்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.�,