hகரூரில் தேர்தலை நிறுத்த சதி: தம்பிதுரை

Published On:

| By Balaji

கரூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த திமுக கரூர் மாவட்டப் பொறுப்பாளரான செந்தில்பாலாஜி முயற்சி செய்வதாக தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் அமமுகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இவர் கரூர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால், கரூர் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை வெற்றிபெறச் செய்து, கட்சியில் தனக்கான செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

குறிப்பாக, ஜோதிமணிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜோதிமணியும், தம்பிதுரையும் பிரச்சாரக் களத்தில் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம்சுமத்தி வருகின்றனர். ஜோதிமணியும், செந்தில் பாலாஜியும் கரூர் தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஈழ விவகாரம் தொடர்பாகக் கேள்வியெழுப்பிய இளைஞர்களை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மருத்துவமனைக்குச் சென்று தம்பிதுரை அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூரில் தேர்தலை நடத்தக் கூடாது என்பதுதான் செந்தில்பாலாஜியின் குறிக்கோள். அரவக்குறிச்சியில் முன்பு செய்த சதித்திட்டத்தை தற்போது மக்களவைத் தேர்தலிலும் செய்ய நினைக்கிறார். அதற்காகத்தான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள்” என்றார்.

மேலும், பிரச்சாரத்தின்போது தன் மீது திட்டமிட்டு கொலை வெறித்தாக்குதல் நடத்த முயற்சி செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது, காவல் துறையினர் சரியான நேரத்தில் வந்ததால் சிறிய அளவிலான பாதிப்போடு தான் தப்பியதாகவும் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share