சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகிறார். தான் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கு முன்னோட்டமாக மையம் விசில் என்ற செயலியையும் வெளியிட்டுள்ளார். வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடரில் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிட்டதற்காக இந்து அமைப்புகள் கமல்ஹாசனை தாக்கிப் பேசி வந்தனர்.
தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்த கமல்ஹாசன் நேற்று ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி குறித்து, சுயமாக வளர்ந்த சுயேச்சை ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்துள்ளார். டோக்கனுக்கு விலை போய்விட்டார்கள் ஆர்.கே.நகர் வாக்காளர்கள். இது ஜனநாயகத்துக்கு வீழ்ச்சி என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தினகரனும் எதிர்வினையாற்றியிருந்தார்.
வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் போன்று கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். தமிழக வாக்காளர்களை இழிவுபடுத்திய நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உடுமலை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமல்ஹாசன் இல்லத்தை இந்து பாதுகாப்பு கட்சியினர் இன்று ( ஜனவரி 5) முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியானது. தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கமல்ஹாசன் வீட்டின் முன்பு இன்று காலை முதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சருடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் வீட்டின் முன்பு, கடந்த ஜூலை மாதம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.�,