ஒரே நாளில் பாலம் கட்டிய இளைஞர் படை!
சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிப்பதற்காக கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்களில் உள்ள மாணவர்கள் வந்து செல்கின்றனர். இக்கிராமங்கள் யாவும் பழைய கொள்ளிடம் ஆற்றின் அக்கரையில் இருப்பதனால், இந்தக் கிராமங்களிலிருந்து வரும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த ஆற்றைக் கடந்துதான் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. ஆனால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த சமயத்தில் அப்பாலம் உடைந்துவிட்டது. கட்டப்பட்ட மூன்று வருடங்களில் பாலம் பயனற்றதாகிவிட்டது. அன்றிலிருந்து கடந்த ஏழு வருடங்களாக அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கிச் சென்றுதான் அக்கரையை அடைகின்றனர். நீர் பெருக்கெடுத்து ஓடும்போது மாணவர்கள் ஆற்றைக் கடப்பது ஆபத்தானதாகிவிடுகிறது.
இப்படிப் பல சிரமங்களுக்கு உட்பட்ட கிராம மக்கள் அரசாங்கத்திடம் பாலம் கட்டித்தருமாறு தொடர்ந்து மனுக்களைக் கொடுத்த வண்ணம் இருந்தனர். அரசாங்க அதிகாரிகளும் தொடர்ந்து இவர்களின் மனுக்களை உதாசீனப்படுத்திய வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் இக்கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களுக்கான பாலத்தைத் தாங்களே கட்ட வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். உடனடியாக செயல்பட்ட அவர்கள் கிராம மக்களிடம் வசூல் செய்த 20 ஆயிரம் ரூபாயை வைத்து ஒரே நாளில் முழு மூச்சாகச் செயல்பட்டுப் பாலத்தைக் கட்டி முடித்தனர். பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் பாதையிலேயே தயார் நிலையிலிருந்த சிமென்ட் தூண்களை ஊன்றி, அவற்றின் மேல் மூங்கில் கட்டைகளால் முடிச்சிட்டுப் பாலத்தைக் கட்டி முடித்துவிட்டனர். இளைஞர்களின் இந்தச் செயல் பல தளங்களிலும் பாராட்டப்பட்டு வருகிறது.
**- நரேஷ்**�,