வேலையின்மையை ஒழிக்க விவசாயமே சிறந்த வழி!
செய்தி 1:
ஆந்திர மாநில அரசின் கணக்கெடுப்பின்படி, 12 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாப் பட்டதாரிகளாக உள்ளனர். எனவே, ஆந்திராவில் 22 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாடத்தின் விளைவுகளை முதலில் எதிர்கொண்டுள்ள மாநிலம் ஆந்திரா. அரசு தன் பொருளாதார கொள்கைகளை மாற்றியமைக்காவிட்டால், எல்லா மாநிலங்களுக்கும் இதே நிலைதான்!
செய்தி 2:
“இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 49 விழுக்காடு சந்தைப் பங்கை வேளாண் துறைகள்தான் கொண்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 விழுக்காடு. எனவே வேளாண் துறை 4 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சியடைந்தால் உள்நாட்டு உற்பத்தி 8 முதல் 10 விழுக்காடு வளர்ச்சியை எட்டும்” என்பது நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அளித்துள்ள செய்தி.
இந்தியாவின் வளர்ச்சி என்பது கிராமப் பொருளாதாரத்தில் உள்ளது என்றார் காந்தி. இன்னும் நேரடியாக, விவசாயம்தான் இந்தியாவின் பொருளாதரத்தை உயர்த்தும் வழி என்றார் ஜே.சி.குமரப்பா.
விவசாயம் செய்ய முன்வரும் இளைஞர்கள் மீதான சமூகப் பார்வைதான், அவர்களை வேலையற்றவர்களாக வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தித் துறை என்பதுதான் வேலைவாய்ப்பை உருவாக்கும் காரணியாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண் உற்பத்தியும், வேளாண் துறைசார்ந்த வேலைவாய்ப்புகளும்தான் மிகப் பெரிய உற்பத்தித் துறையாக இருந்துவந்தது. சமூகத்தில் விவசாயம் குறித்த தவறான புரிதலும், பசுமைப் புரட்சியால் நிகழ்ந்த நஷ்டமும் வேளாண் துறைமீதான் அவநம்பிக்கையை உருவாக்கிவிட்டன.
வேலையில்லாத் திண்டாடத்தை ஒழிக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் தொழில் வளர்ச்சியை விட வேளாண் துறை வளர்ச்சிதான் ஒரே வழியாக இருக்கும் என அரசின் பொருளாதார நிபுணர்கள் இப்போது பேசிவருகிறார்கள். பசுமைப் புரட்சியைப் பரப்புரை செய்த அதே வீரியத்துடன் இந்தக் கருத்தினையும் பரப்புரை செய்து வேளாண் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வேலையில்லாத் திண்டாடத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
**- நரேஷ்**�,”