என்னதான் நடக்கிறது இந்தியப் பொருளாதாரத்தில்?
வெளிநாடுகளுக்குப் பாதி விலையில் எண்ணெய் ஏற்றுமதி, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, துருக்கி நாட்டின்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பினால் இந்தியா ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட தாக்கம், சிறு குறு தொழில்களின் நலிவு, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தோல்வி, ரொக்க சேமிப்பு குறைவு என்று இந்தியப் பொருளாதாரத்தில் சூறாவளியே வீசிக்கொண்டிருக்கிறது.
வழக்கம்போல இவை யாவும் எதிர்க்கட்சிகளின் பொய்க் குற்றச்சாட்டுகள் என்று ஒதுங்கிக்கொள்ளாமல், அரசு உண்மையை ஒப்புக்கொண்டிருப்பது சிறப்பு. மத்தியப் பொருளாதார விவகாரத் துறைச் செயலரே இதனை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. ஆனால், இவற்றைப் பூசி முழுகும் நோக்கில் அறிக்கைகள் வெளியிடப்படுவதுதான் வேதனையளிக்கிறது. நிலைமை இவ்வளவு மோசமாக இருக்க, நிதி அமைச்சரோ, “அடுத்த ஆண்டு பிரிட்டனை வீழ்த்தி இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறும்” என்று ஆருடம் உரைக்கிறார். இந்த உரைக்கு உதாரணமாகக் கடந்த ஆண்டுகளின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சியை முன்னிறுத்துகிறார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி உயர்ந்துவருவது உண்மைதான். ஆனால், தனிநபர் ஜிடிபியைப் பொறுத்தவரை இந்தியா பல மடங்கு பின்தங்கியுள்ளதை ஏன் கவனப்படுத்த மறுக்கிறார்கள்?
இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்குப் பணக்காரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி இருக்கிறது. மறுபுறம், இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கான தனிநபர் பொருளாதார வீழ்ச்சியும், சில்லறை விற்பனை மற்றும் சிறுதொழில் சீரழிவும் நிகழ்ந்து வருகின்றன.
பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகையில், “வரலாறு காணாத ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும், பெட்ரோல் உயர்வும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மைதான். எனினும் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைப் பொறுத்தவரை தேவைக்கும் அளிப்புக்குமான விகிதத்தில் சிறிய அளவிலான மாற்றம் உள்ளதும் ஒரு காரணமாக உள்ளது. பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுடன் பேசிவருகிறோம். இந்தச் சிக்கல்கள் எல்லாம் தற்காலிகமானவையே”.
சிக்கல்கள் தற்காலிகமானவையா, நிரந்தரமானவையா எனும் கேள்வியைக் காட்டிலும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான காரணம் என்ன எனும் கேள்விதான் மேலோங்கி நிற்கிறது. இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவரை மத்திய அரசோ, நிதி அமைச்சகமோ தெளிவான, நேர்மையான காரணங்கள் சொல்லப்படவில்லை.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால் தொடுத்த ஆர்டிஐ மூலமாக, இந்தியாவிலிருந்து மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் ரூபாய் 32 முதல் ரூபாய் 34 வரையிலும், டீசல் ரூபாய் 34 முதல் ரூபாய் 36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள்தான் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியப் பொருளாதாரத்தின் மீதான அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன.
**- நரேஷ்**�,”