ஐநா பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெற முடியாமல் போனதற்கு ஜவகர்லால் நேருதான் காரணம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.
ஐநா பாதுகாப்புக் குழுவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இவ்விவகாரத்தில் இத்துடன் நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் செயல் ஏமாற்றமளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பலவீனமான மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கைக் கண்டு அஞ்சுகிறார். இந்தியாவுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் நரேந்திர மோடி வாயிலிருந்து ஒரு வார்த்தைக்கூட வருவதில்லை. குஜராத்தில் சீன அதிபருடன் ஊஞ்சலாடுவது, டெல்லியில் அவரை கட்டி அணைத்துக்கொள்வது, சீனாவில் அவருக்குத் தலை வணங்குவது. இவற்றைதான் சீன விவகாரத்தில் அரசியல் தந்திரமாக நரேந்திர மோடி பயன்படுத்துகிறார்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், “காஷ்மீர், சீனா இரு விவகாரங்களிலுமே உண்மையாகத் தவறு செய்தது ஜவகர்லால் நேருதான். 1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று பண்டிட் நேரு முதலமைச்சர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ஐநாவில் சீனா இருக்கலாம். ஆனால், ஐநா பாதுகாப்புக் குழுவில் சீனா இடம்பெறக் கூடாது எனவும், பாதுகாப்புக் குழுவில் இந்தியா இடம்பெற வேண்டும் எனவும் அமெரிக்கா பரிந்துரைத்ததாகத் தெரிவித்துள்ளார். நிச்சயமாக இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. சீனா போன்ற மாபெரும் நாடு பாதுகாப்புக் குழுவில் இடம்பெறவில்லை என்றால் நியாயமாக இருக்காது. உண்மையாகவே தவறு செய்தது யார் என்பதை இப்போதாவது காங்கிரஸ் தலைவர் கூறுவாரா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.�,