இந்தியாவைச் சேர்ந்த 49 திரைப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், “இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடந்த ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர். இக்கடிதத்தில் இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா, கொங்கனா சென் சர்மா உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்த நிலையில் பிரதமரின் மரியாதையை குறைக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா அளித்த புகாரின் பேரில், கடிதம் எழுதிய 49 பேர் மீதும் பீகார் மாநிலம் சகர் காவல் நிலையத்தில் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கருத்தை தெரிவித்தால் அது தேசதுரோகமாக என்று இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து தேசதுரோக வழக்கு பதியப்பட்டவர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “எங்களுக்கு என்ன நடக்கிறது? தேசதுரோக வழக்கு பற்றி கேள்விப்பட்டதும் அதனை நான் நம்பவே இல்லை. ஒரு கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதிக்குமா என்பதை நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. அந்த கடிதத்தை அப்படியே வாசிப்பது அதன் ஆன்மாவிற்கே எதிரானது. ஆனால், அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தால் அது தேசத்துரோகம் கிடையாது. ஆம், நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் இத்தகைய வன்முறைகள் தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையோடும், சமூக அக்கறையின் காரணமாகவும் 49 பேரும் இக்கடிதத்தை எழுதியுள்ளனர். அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பீகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைவிட ஜனநாயக விரோத, அச்சுறுத்தல் நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது” என்று குற்றம்சாட்டினார்.
“பம்பாய் படத்தை திரையிட்டதற்காக தீவிரவாதிகள் இயக்குநர் மணிரத்தினத்தின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். அந்த தீவிரவாத செயலுக்கும், நரேந்திர மோடி ஆட்சியில் தற்போது தொடுக்கப்படுகிற வழக்கிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது” என்று கேள்வி எழுப்பிய அழகிரி,
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டில் உள்ள நிலைமைகள் குறித்து மகாத்மா காந்தி பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார். அவர்கள் பதில் கடிதம் எழுதினார்களே தவிர, மகாத்மா காந்தி மீது தேச துரோக வழக்கு தொடுக்கவில்லை. ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியை விட சர்வாதிகார நோக்கத்தில் நரேந்திர மோடி ஆட்சி செயல்படுவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். நாட்டு நலனில் அக்கறையோடு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இவர்கள் மீது புனையப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “என்ன காரணம் என தெரியவில்லை. முழு விவரங்கள் தெரியாமல் கருத்து சொல்ல முடியாது” என்று மழுப்பலாக பதிலளித்துவிட்டுச் சென்றார்.
�,