மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கவிருக்கிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், தன்யா ஹோப், வித்யா பிரதீப் நடிப்பில் இந்தாண்டு வெளியான தடம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேணி இயக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக மகிழ் திருமேணி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தடம் படத்தின் ரிலீசுக்கு முன்பே உதயநிதியிடம் இப்படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாராம் மகிழ்.
மகிழ்திருமேனியின் வழக்கமான த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தேதி முடிவானதும், மேகா ஆகாஷ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது.
மேகா ஆகாஷ், கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டியவர். அப்படத்தின் தாமதத்தால் இந்தாண்டு பொங்கலுக்கு வந்த ரஜினியின் ‘பேட்ட’ படமே இவருக்கு தமிழில் அறிமுகப் படமானது. அதன் பின்னர், சிம்புவின் ‘வந்தா ராஜா வாதான் வருவேன்’ படத்தில் நடித்தார் மேகா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் மேகா ஆகாஷ், உருவாகிக் கொண்டிருக்கும் ‘சாட்டிலைட் சங்கர்’ படத்தின் மூலம் இந்தியிலும் தடம் பதிக்கவுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் சைக்கோ, கே.எஸ். அதியமானின் ஏஞ்சல், மு. மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே போன்ற படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்படங்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன.�,