டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்
மனதை ஆராய்ந்து, வாழ்வை அலசும் சிறப்புத் தொடர்
உலகின் சிறந்த மனிதர் இப்படித்தான் இருப்பார் என்று எந்த வரையறையும் இதுவரை வகுக்கப்படவில்லை. எல்லைகளற்ற பெருவெளியைப் போல, மனித மாண்புக்கும் எல்லைகள் கிடையாது. ஆனால், சிறந்த அல்லது அழகான மனிதரின் உருவம் மட்டும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எல்லைகள் வகுக்கப்படுவது காலம் காலமாகத் தொடர்ந்துவருகிறது. ஆண், பெண் என்று இருபாலரும் இதற்கு ஆட்படுவதில் எந்தப் பேதமுமில்லை. ஒரு வட்டாரத்தின் பழக்க வழக்கம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தகவமைப்பைப் பொறுத்து இது அமைகிறது.
அழகான, வடிவான, எல்லோருக்கும் பிடித்தமான ஆண் அல்லது பெண் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற விதிமுறைகள் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. கிழக்காசியப் பகுதிகளில் மஞ்சள் நிறத் தோலுடையவர்களும், ஆப்பிரிக்காவில் கறுப்புத் தோலுடையவர்களும், ஐரோப்பாவில் வெண்ணிறத்தில் இருப்பவர்களும் ரசிக்கப்படுவதை அப்படித்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதையெல்லாம் மீறி, குண்டாக இருப்பதும் ஒல்லியாக இருப்பதும் பலரால் கிண்டலடிக்கப்படுகிறது.
நிறத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள்கூட, தங்களது உடல்வாகு ஃபிட்டாக இருக்க வேண்டுமென்று விருப்பப்படுவார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் ஜிம்முக்குச் சென்று உடலைப் பெரிதாக்க விரும்புவதும், குண்டாக இருப்பவர்கள் இளைக்க நினைப்பதையும் பார்க்கிறோம். குறிப்பாக, குண்டாக இருப்பவர்களுக்குத் தங்கள் உருவம் சார்ந்த தாழ்வுமனப்பான்மை மிக அதிகமாக உள்ளது. இதனால், பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
**எடை தந்த வேதனை**
குண்டாக இருப்பதைத் தவிர்ப்பது எப்படி என்று சிந்தித்து, இந்தப் பிரச்சினையிலிருந்து இவர்கள் தப்பிக்க முயல்கின்றனர். அவர்களில் ஒருவராகத்தான், வந்தனாவும் தன்னைக் கருதினார். ஆனால், அவரால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பிரச்சினை பெரிதான பின்புதான், மனநல சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவர் ஒப்புக்கொண்டார். மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு, வந்தனாவை அவரது பெற்றோர் அழைத்துவந்தனர்.
எழுந்து நிற்கக்கூட முடியாத அளவுக்குச் சோர்வடைந்திருந்தார் வந்தனா. சென்னையிலுள்ள புகழ்பெற்ற கல்லூரியொன்றில் மூன்றாமாண்டு படித்துவந்தார். அந்தக் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான், வந்தனாவின் போக்கில் மாற்றம் இருப்பதாகத் தெரிவித்தனர் அவர் பெற்றோர். பெண் காதல் வயப்பட்டிருக்கிறாளா, வேறு ஏதேனும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறாளா என்பது உட்படப் பல்வேறு சந்தேகங்கள் அவர்களிடம் நிலைகொண்டிருந்தன.
வந்தனாவிடம் பேசியபோது, இதற்கான பதில் கிடைத்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அவர் எடைக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார். வந்தனாவின் வயது 21. உயரம் மற்றும் உருவத்துக்கு ஏற்ற வகையில் தனது எடை இல்லை என்று அவர் வருத்தப்பட்டார். இதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அவரது கல்லூரியில் சில பெண்களின் நடவடிக்கைகள் இருந்தன.
மிகவும் ஒல்லியாக, எல்லோரையும் ஈர்க்கும் விதமாக, அந்தப் பெண்கள் இருந்தனர். அவர்களைப் போலத் தானும் ஆக வேண்டுமென்று விரும்பினார். இந்த விருப்பத்தை நிறைவேற்றுவது எவ்வாறு என்று தெரியாமல் தவித்தார் வந்தனா. தனது பெற்றோர்கள் இருவரும் ஒல்லியாக இருப்பதை நினைத்து வருந்தினார். போதாக்குறைக்கு, கல்லூரியில் அறிமுகமான சில தோழிகளும் இதனைச் சுட்டிக்காட்டினார்கள். அப்போது, அவர்கள் காட்டிய வழிதான் எடைக் குறைப்பு நடவடிக்கை.
வந்தனா எட்டாம் வகுப்பில் படித்தபோதே 74 கிலோ எடை இருந்தார். கடந்த காலத்தில் இந்தப் பிரச்சினையினால் அவர் எதிர்கொண்ட அவமானங்கள் ஏராளம். இந்தக் காலகட்டத்தில், அவரைச் சந்திப்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் அவருக்கு அறிவுரை கூறினார்கள். நட்பும் உறவும் அதிகமிருப்பதாகக் கருதியவர்கள் அல்லது காட்டிக்கொண்டவர்கள், வந்தனாவை உரிமையுடன் திட்டினார்கள். உடல் எடையைக் குறைப்பதைவிட வேறு முக்கியமான விஷயம் வாழ்க்கையில் கிடையாது என்பதைப் போன்றொரு பிம்பத்தை அவர் மனதில் ஏற்படுத்தினர்.
உடல் எடை குறையுமென்றால் எதை வேண்டுமானாலும் செய்யத் தயார் என்ற நிலைக்கு ஆளானார் வந்தனா. பத்திரிகைகளில் எடைக் குறைப்பு சம்பந்தமாக ஏதேனும் தகவல்கள் வந்தால், அதனை எடுத்து தனியாகத் தொகுத்தார். அவற்றை எல்லாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றிப் பார்த்தார். எதுவும் பலன் தரவில்லை என்ற எண்ணம் வந்தவுடன், தன் மீதே அவருக்கு வெறுப்பு உண்டானது.
பருவ வயதுக்கே உரிய எதிர்பாலின ஈர்ப்பும் வந்தனாவிடம் குடிகொண்டது. அதனை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. தான் வசித்த பகுதியில் இருந்த மிக அழகான வாலிபர் ஒருவரைப் பிடித்திருப்பதாக, ஒருமுறை தனது பள்ளித் தோழிகள் மத்தியில் கூறினார். அவ்வளவுதான். வந்தனாவின் குண்டான உடல் வாகை வைத்து, அனைவரும் கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களது பேச்சு வந்தனாவை வெறியூட்டியது. தனது அடையாளமாக, தனது உடல் பருமனே இருப்பதாக நினைத்தார். அதனை மாற்றிக் காட்ட வேண்டுமென்று சபதமிட்டார்.
**விபரீத முடிவுகள்**
அதற்காக, அவர் எடுத்த முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகிப்போயின. அந்த நேரத்தில்தான், ஜீரோ டயட் பற்றி வந்தனாவிடம் கூறினர் அவருடன் கல்லூரியில் படித்த பெண்கள். வந்தனா, அவர்களைத் தனது தோழியாகக் கருதவில்லை. ஆனாலும், அவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றினார். எடைக் குறைப்பு என்று முடிவானதுமே, நம்மவர்கள் மனதில் நிற்பது சாப்பாட்டைத் தவிர்ப்பதுதான். அதுவும் ஜீரோ டயட் என்ற பெயரில், அறவே சாப்பிடாமல் தவிர்த்தார் வந்தனா.
கல்லூரிக்குச் சென்றபோது, வீட்டில் கொடுத்தனுப்பிய உணவை வேறு மாணவிகளுக்குக் கொடுத்துவிடுவார். கையில் கலோரி கணக்கொன்றை வைத்துக்கொண்டு, மிகக் குறைவான அளவில் சாப்பிட்டார். சாப்பிடும் உணவெல்லாம் உடலில் தங்குவதால் குண்டாக இருப்பதாகச் சிலர் நினைப்பார்கள். வந்தனாவும் அவர்களில் ஒருவராகத் தான் இருந்தார்.
ஒருகட்டத்துக்கு மேல் எதுவும் சாப்பிடுவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். வீட்டில் இருக்கும்போது இதனைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால், அதற்கொரு வழி கண்டுபிடித்தார். சாப்பிட்ட சில நிமிடங்களில், அனைத்தையும் வாந்தி எடுப்பது. இந்த வழிமுறையையும் கல்லூரியில் அறிமுகமான அந்தப் பெண்களே சொல்லித் தந்தனர். பெற்றோர்களுடன் சேர்ந்து சாப்பிடும் வந்தனா, சில நிமிடங்களில் டாய்லெட் செல்வார். வாய்க்குள் கையை விட்டு அனைத்தையும் வாந்தியெடுப்பார்.
இதனைப் பெற்றோரும் உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. சாப்பாடு வந்தனாவுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றே நினைத்தனர். இதனால், தனது கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றி, உடல் எடையைக் குறைக்கத் தொடங்கினார் வந்தனா. இதற்காக, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பங்கேற்பதைத் தவிர்த்தார். அங்கு சென்றால் சாப்பிட வேண்டியிருக்கும்; அதன் பிறகு, உடனடியாக வாந்தியெடுக்க வழியிருக்காது. இதனால் ஏதேனும் காரணம் சொல்லி, அவற்றில் இருந்து விலகியிருக்கத் தொடங்கினார் வந்தனா.
இதனை மீறி, வெளியிடங்களில் தெரிந்தவர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைவார். காரணம், அவரது எடைக் குறைப்பு நடவடிக்கைகளுக்குக் கிடைத்த பலன்கள். பெரும்பாலானவர்கள் வந்தனாவை நேரில் பார்த்ததும் ஆச்சரியமடைந்தனர். ‘நல்லா மெலிஞ்சிட்டியே’ என்ற அவர்களது வார்த்தைகள், ‘நாளுக்கு நாள் குண்டாகிட்டே போற’ என்ற முந்தைய வார்த்தைகளுக்கு எதிர்த்திசையில் இருந்தன. இதனை மிகவும் விரும்பினார் வந்தனா. சைஸ் ஜீரோ கனவை நோக்கி மெதுமெதுவாக நகர்ந்தார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில், வந்தனாவின் எடை 74 கிலோவிலிருந்து 32 கிலோவாகக் குறைந்தது. எடைக் குறைப்பினால் மகிழ்ச்சியை அனுபவித்த வந்தனா, இன்னொரு பக்கம் அதன் கடுமையான எதிர்விளைவுகளையும் எதிர்கொண்டார். சாப்பிட உட்கார்ந்தால், ஒரு சில பருக்கைகளோ அல்லது அரை இட்லியோ மட்டுமே அவரது வயிற்றுக்குள் சென்றன. அவரே நினைத்தாலும், அதனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. அதனை மீறும்போதெல்லாம் வாந்தி மற்றும் பேதியால் அவஸ்தைப்பட்டார்.
இந்தச் சமயத்தில்தான், வந்தனாவின் குறைபாடு உடனடியாகச் சரிசெய்ய வேண்டியது என்பதனை உணர்ந்தனர் அவரது பெற்றோர். இல்லாவிட்டால், அவரது உயிருக்கே ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டனர்.
(வந்தனாவின் உடல் நிலை எப்படிச் சீரானது? உடல் நலனைப் பணயம் வைக்காமல் உடல் பருமனை எதிர்கொள்வது எப்படி? உடலமைப்பு குறித்த உளவியல் என்ன? – நாளை…)
*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன*
**எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்**
கட்டுரையாளர்கள்:
**டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்**
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.
**டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்**
மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார்.
குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.
�,”