அர்ப்பணிப்பு உணர்வோடு மாணவர்களுக்கு கல்வியையும் அறத்தையும் போதித்த ஆசிரியர்கள் வாழ்ந்தது அந்தக் காலம். இன்று, ஆசிரியர் பணியும் ஒரு அரசு வேலை என்று நினைத்து மாத ஊதியத்தை மட்டுமே மனதில்கொண்டு வாழ்வோர் நிறைந்திருப்பது இந்தக் காலம். எல்லா ஆசிரியர்களையும் அப்படி பொருப்பில்லாதவர்களாகச் சித்தரித்துவிட முடியாது. இன்னும் ஆசிரியர் தொழிலை அர்ப்பணிப்புணர்வோடு செய்கிறவர்கள் பெரும்பான்மையோராக இருந்தாலும் ஒருசிலர் பொருப்பற்று நடந்து கொள்கிறார்கள்.
அப்படி மாணவர்களையும் பெற்றோர்களையும் அலட்சியப்படுத்தி ஆசிரியைகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எழிச்சூரில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 160 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 9 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்நிலையில், முதலாம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்காமல், பல்வேறு காரணங்களைக்கூறி அலட்சியமாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் தான்சி பெர்னாண்டோ இருவரும் பெற்றோர்களை அலைக்கழித்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும் 8ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு டீ.சி. வழங்கப்படாமல் தாமதமாக்குகிறார்கள். இதனால், மற்ற பள்ளியில் சேர முடியாமல் மாணவர்கள் தவித்துவருகின்றனர். எனவே, பெற்றோர்களும் ஊர் மக்களும் பள்ளியைப் பூட்டிவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓரகடம் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை உடைத்து பள்ளியைத் திறந்து வைத்தனர்.
இதற்கிடையே, தலைமை ஆசிரியர்களுக்கும் கிராமப் பெண்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்யுமாறு கிராம மக்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியரையும் உதவி தலைமை ஆசிரியரையும் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியின் பரிந்துரையின்பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே அப்பள்ளியில் கடந்த 2013ம் ஆண்டு 2 மாணவர்களை விஷப் பூச்சி ஒன்று கடித்தபோது, முதலுதவி செய்யாமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அப்பள்ளியிலேயே பணியமர்த்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியின் சக ஆசிரியர்களிடையேயும் இவர்கள் இருவரும் பனிப்போரில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்னையில் ஆசிரியர்கள் இருவர்மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என குன்றத்தூர் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரமேஷ் கூறியுள்ளார்.�,