கிண்டி அரசு கொரோனா மருத்துவமனை படிப்படியாக தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, கிண்டி கிங்ஸ் ஆய்வக வளாகத்தில் ரூ.127 கோடி மத்திய அரசு நிதியின் கீழ் தேசிய முதியோர் நல மருத்துவமனைக்கான கட்டடம் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவதற்குள், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது. இதையடுத்து, தேசிய முதியோர் நல மருத்துவமனை, அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
அங்கு, ஆக்சிஜன் வசதியுடன் 750 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் அரசு பொதுமருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் உள்ளிட்ட அரசு மருத்துமவனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டாலும், ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை கிண்டிஅரசு கொரோனா மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற விரும்பினர். இதனால், மற்ற மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருந்தாலும், இங்கு மட்டும் எப்போதும் படுக்கைகள் நிரம்பிய நிலையில் இருந்தது.
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மையமும் இங்கு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது, கொரோனா மூன்றாம் அலைக்கு பின், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் வந்துவிட்டது.
கிண்டி அரசு கொரோனா மருத்துவமனையில் நோயாளிகள் யாரும் வருவதில்லை. அங்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் வழக்கம்போல், சென்னை அரசு பொது மருத்துவமனைக்குத் திரும்பியுள்ளனர். தற்போது, இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே, எப்போதாவது வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்துவிட்டதால், இந்த மருத்துவமனையை தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள், “தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. தொற்றின் நான்காவது அலை வருமா, வராதா என்பதை உறுதியாக தெரியவில்லை. அதனால், கிண்டி அரசு கொரோனா மருத்துவமனை, தேசிய முதியோர் நல மருத்துவமனையாக படிப்படியாக மாற்றப்படும்” என்று உறுதியளித்துள்ளனர்.
**ராஜ்**
.