இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் உள்ள 104 நிறுவனங்களில் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாகத் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவில் உயர்ந்த விருதான சர்தார் பட்டேல் விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் நீடித்த ஆராய்ச்சி பணி, வாழை அறுவடை, உற்பத்தி, அதன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு பின் தொழில்நுட்பங்கள் என்ற வெவ்வேறு தளங்களில் சிறப்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் உமா, “ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜீன் வங்கியைக் கொண்ட திருச்சி ஆராய்ச்சி மையத்தில் 25 ஆண்டுகளாக 460 வாழை ரகங்களைப் பராமரித்து வருகிறோம். கருவாழை, விருப்பாச்சி, சிறுமலை போன்ற அழியும் நிலையில் உள்ள வாழை ரகங்களையும் உற்பத்தி செய்கிறோம்.
தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றாற்போல் வளரும் வகையில் ஆறு வகையான வாழையினத்தைப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளோம். வைட்டமின் ஏ, இரும்புச்சத்துக் குறைபாட்டினை போக்கும் வகையில் உண்ண ஏதுவாக வாழையில் ப்ரோ-வைட்டமின் ‘ஏ’ இரும்புச்சத்துகளை உள்ளடக்கிய வாழையினை தயார் செய்து மூன்று ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த உள்ளோம்” என்று பேசியவர்…
மேலும், “வாழையில் வாடல் நோயால் வாழை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு நவீனத் தொழில்நுட்பங்கள் அளித்து வாடல் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பர்ய நேந்திர வாழையினை அரேபிய நாடுகளுக்கு ரூ.100 கோடிக்கு ஏற்றுமதி செய்த நிலை மாறி, தற்போது ரூ.400 கோடிக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். மேலும், தேனி வாழை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தப் பழங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்பான காவிரி சபா, 150 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியா முழுவதும் பயிரிடப்பட்டுள்ளது. காவிரி,கல்கி ஆகிய ரகங்கள் கஜா புயலிலும் பாதிக்கப்படாமல் நன்கு வளர்ந்துள்ளன. நேந்திரம் வாழையினைப் போன்று அதன் ஹைபிரிட் ரகமும் நேரடியாகச் சாப்பிடும் வகையில் அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் .
சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் கிராண்ட் 9, நெய்பூவனுக்குக் குறைவாக அடர்த்திகொண்ட ஒருசில வாழைரகங்களும் கண்டறியப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஜீன் வங்கியைக் கொண்ட திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்துக்குத் தேசிய அளவில் உயர்ந்த விருதான சர்தார் பட்டேல் விருதினை இணையவழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கினார்.
**-ராஜ்**
.�,”