இந்தியன் பிரீமியர் லீக் 2020 தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) நடுவரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே நாளில் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதைக் காண அவரது ரசிகர்கள் பட்டாளம் காத்திருந்தது. இந்நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக தோனி தலைமையில் சென்னைக்கு வந்த சிஎஸ்கே அணி, கடந்த 21ஆம் தேதி துபாய் புறப்பட்டுச் சென்றது.
விதிமுறைப்படி வெளிநாடுகளிலிருந்து துபாய் சென்றவர்கள், ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். முதல் நாள், 3ஆவது நாள் மற்றும் 6ஆவது நாள் என மூன்று நாட்கள் கொரோனா பரிசோதனை செய்யப்படும். மூன்று பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த வகையில், பரிசோதிக்கப்பட்டதில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வேகபந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்ற அணிகள் நேற்று முதல் பயிற்சியைத் தொடங்கிய நிலையில், சிஎஸ்கே அணி செப்டம்பர் 1ஆம் தேதி வரை தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தகவல் வெளியானது.
ஏற்கனவே செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் போட்டியின் இறுதி அட்டவணையை வெளியிடுவதை பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது.
இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்கு மற்றொரு பின்னடைவாக சுரேஷ் ரெய்னா போட்டியிலிருந்து விலகியுள்ளார். இந்த தகவலை சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா சொந்த காரணங்களுக்காகத் துபாயிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார். இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சிஎஸ்கே அணியினர் தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில் தற்போது, ரெய்னாவும் தொடரில் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
**-கவிபிரியா**�,